×

கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ம் ஆண்டில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை: தமிழகத்திற்கு 2வது இடம்!

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ம் ஆண்டில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. அதன்படி இந்த ஆண்டில் மட்டும் சராசரியாக 24 மணி நேரத்தில் 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தேசிய குற்றப்பதிவு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, 2009 ஜனவரி 1ம் தேதி முதல், 2018 டிசம்பர் 31ம் தேதி வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 81,758 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகபட்சமாக 2018ம் ஆண்டு மட்டும் 10,159 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 2018ல் 1.3 லட்சம் தற்கொலைகள் நடந்துள்ளது. இவற்றில் 8 சதவீதம் பேர் மாணவர்கள், 8 சதவீதம் பேர் விவசாயிகள், 10 சதவீதம் பேர் வேலையில்லாதவர்கள் ஆவர். 2018ல் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலோனோர் தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குடும்ப சூழல் காரணமாக மனஅழுத்தத்திலேயே மாணவர்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மன அழுத்தம், பயம், மனநல பாதிப்பு பிரச்னைகள், போதைப் பொருட்கள் ஆகியன மாணவர்கள் தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வெளியில் செல்ல வழி இல்லாததால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

2018ல் மாநில வாரியாக மாணவர்களின் தற்கொலையை பொருத்தவரை 1448 தற்கொலை சம்பவங்களுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 953 தற்கொலை சம்பவங்கள் நிகழ்நுதுள்ள தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன. இதேபோல், 862 தற்கொலை சம்பவங்களுடன் மத்திய பிரதேசம் 3வது இடத்திலும், 755 தற்கொலைகள் நிகழ்ந்துள்ள கர்நாடகா 4வது இடத்திலும், 609 தற்கொலைகளோடு மேற்குவங்கம் 5வது இடத்திலும் உள்ளன. 2014 முதல் 2018 வரை இந்த 5 மாநிலங்களுடன் சத்தீஸ்கரும் மாணவர்கள் தற்கொலை அதிகம் உள்ள மாநிலங்களில் இணைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu , Students, Suicides, Farmers, Tamil Nadu, National Crime Archives
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...