×

உக்ரைன் விமானத்தை ஏவுகணையால் தாக்கியது நாங்களே!.. தாக்குதலுக்கு மனித தவறே காரணம்.. ஈரான் அரசு ஒப்புதல்

டெஹ்ரான்: டெஹ்ரானில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தை சுட்டதை ஈரான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.176 பயணிகளுடன் சென்ற விமானத்தை தவறுதலாக சுட்டுவிட்டதாக ஈரான் நாட்டு ராணுவ அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விமானம் சுடப்பட்டதற்கு மனிதத் தவறுதான் காரணம் என்றும் தனது அறிக்கையில் ஈரான் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா, கனடா நாடுகள் குற்றம் சாட்டிய நிலையில், ஈரான் பொறுப்பேற்றது.

*ஈரான் தலைநகர், டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் தீப்பிடித்தபடி கீழே விழுந்து வெடித்து சிதறியது.

*விமானத்தில் பயணம் செய்த ஈரானை சேர்ந்த 82 பேர், கனடாவை சேர்ந்த 63 பேர், உக்ரைனை சேர்ந்த 11 பேர் என மொத்தம் 176 பேரும் பலியாகினர்.

*விமானம் வெடித்து சிதறிய சமயத்தில்தான், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களின் மீது ஈரான் 22 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. எனவே, ஈரான் ஏவுகணையால் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது.

*அதோடு, விபத்தின் போது விமானத்தில் நிலவும் தகவல்கள் பதிவாகியிருக்கும் கருப்பு பெட்டியை விமான தயாரிப்பு நிறுவனத்திடமும், நிபுணத்துவம் பெற்ற நாட்டிடமும் கொடுத்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், விமானத்தின் கருப்பு பெட்டியை விமானத்தின் தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த போயிங்கிடமோ, அமெரிக்க நிபுணர்களிடமோ தர முடியாது என ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இதுவும் சந்தேகத்தை வலுக்கச் செய்தது.

*இந்நிலையில், விபத்து நடந்த சமயத்தில் வானில் அதிவிரைவாக வந்த ஒரு பொருள் உக்ரைன் விமானத்தின் மீது மோதுவது போலவும், அதைத் தொடர்ந்து பயங்கர தீப்பிழம்பும், சில விநாடிகள் கழித்து பயங்கர சத்தமும் ஏற்பட்டு, விமானம் தீப்பிடித்தபடி தரையில் விழுந்து வெடித்து சிதறுவதாகவும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

*அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வீடியோ காட்சிகள் பரவியதைத் தொடர்ந்து பேட்டி அளித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஈரான்தான் தவறுதலாக ஏவுகணையை ஏவி உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

*இதே போல், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் பலரும் கனடாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

*இந்நிலையில் உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் நாட்டு தொலைக்காட்சியில் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் விமானத்தை ஏவுகணையால் தாக்கியது நாங்களே என்றும் உக்ரைன் விமானத்தை ஏவுகணை மூலம் ராணுவம் வீழ்த்தியதற்கு மனித தவறே காரணம் என்றும் ஈரான் அரசு கூறியுள்ளது. மேலும் உக்ரைன் விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் திட்டமிட்டு திட்டமிட்டு சுட்டு வீழ்த்தவில்லை என்றும் தாக்குதலுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

*இதனிடையே உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி அறிவித்துள்ளார். மேலும் மன்னிக்கமுடியாத தவறாக நடந்துவிட்ட சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றும் ஈரான் அதிபர் கூறியுள்ளார்.


Tags : ones ,Ukraine ,government ,attack ,Iran , Tehran, Passenger, Ukraine, Iran, Flight, Approval, USA, Canada
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...