×

முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ரத்து சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி : அன்புமணி அறிக்கை

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய வேதியியல் பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்  பணிக்கான போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை  சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 17 பாடங்களுக்கான 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. அவற்றில் வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட 12 பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி வெளியிடப்பட்டது. வேதியியல் பாட ஆசிரியர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியலினத்தவருக்கும் துரோகம் இழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய பட்டியலை தயாரித்து வெளியிடும்படி வலியுறுத்தியிருந்தேன்.

இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ள நீதியரசர், வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலை தயாரிக்கும்படி தேர்வு வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது. பின்னடைவுப் பணியிடங்களையும், நடப்புக் காலியிடங்களையும் ஒன்றாக நிரப்பும் போது முதலில் நடப்புக் காலியிடங்களுக்கான பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும்; பின்னர் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் முதலில் பின்னடைவுப் பணியிடங்களையும், தொடர்ந்து நடப்புக் காலியிடங்களில் சம்பந்தப்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும் என்றும் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையின்படி முதுநிலை ஆசிரியர் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34 பணியிடங்களும், பட்டியலினத்தவருக்கு 5 இடங்களும் கூடுதலாக கிடைக்கும். சென்னை உயர் நீதிமன்றம் மட்டும் இவ்விஷயத்தில் தலையிட்டிருக்காவிட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சமூகநீதி கிடைத்திருக்காது. கடந்த ஜனவரி 2ம் தேதி வெளியிடப்பட்ட தமிழ், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலிலும் சமூக அநீதி தொடர்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Cancellation of Senior Teacher Exam List Success ,Social Justice, Anmani Report
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...