×

தர்பார் படக்குழு மீது தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு : போலீஸ் அதிகாரியை அவதூறாக சித்தரிப்பதாக புகார்

தூத்துக்குடி : ‘தர்பார்’ படத்தில் போலீஸ் அதிகாரியை அவதூறாக சித்தரித்துள்ளதாக நடிகர் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படம் வெளியானதிலிருந்து தினமும் ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறது. குறிப்பாக கர்நாடகா சிறையில் இருக்கும் சசிகலாவை கிண்டல் செய்து சீண்டும் விதமாக வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறி அமமுகவினர் வழக்கு தொடர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நேற்று தூத்துக்குடி 3வது ஜேஎம் கோர்ட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த  மத்திய தொழில் பாதுகாப்பு படை முன்னாள் வீரர் மரிய மிக்கேல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், தர்பார் படத்தில் சீருடை பணியாளர்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும், சீருடையை கொச்சைப்படுத்தும் வகையில் ஹிப்பி தலை, தாடியுடன் ரஜினி வருகிறார். படத்தில் போலீஸ் கமிஷனராக ரஜினி பேசும் வசனத்தில் ‘நான் கமிஷனர் அல்ல ரவுடி’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த காவல்துறை, ராணுவத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. வருங்கால இளைய சமுதாயம் காவல்துறை மீதுள்ள நல்லெண்ணத்தை இது கெடுக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். தர்பார் பட தயாரிப்பாளர், இயக்குநர், நடித்த நடிகர் என மூவர் மீதும் இந்த அவதூறு வழக்கினை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 21ம் தேதி நடக்கிறது.

Tags : Tuticorin ,gangster ,Durbar , Tuticorin court case , Durbar gangster
× RELATED ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட...