×

மக்களுக்கான பணிகளை குறிப்பிடாமல் வெற்றுப் புகழுரைகளால் நிறைந்த ஆளுநர் உரை : மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: மாநிலத்தின் உண்மை நிலைமை, மக்களுக்கான பணிகளை குறிப்பிடாமல் வெற்றுப் புகழுரைகளால்  நிறைந்திருக்கிறது ஆளுநர் உரை என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டம், ஏதோ சடங்குக்காக, கூடினோம் கலைந்தோம் என்று முடிவடைந்திருக்கிறது. மாநில மக்களின் நலன்களைக் காக்கவும் உரிமைகளை மீட்கவும் அதற்கேற்ப சட்டங்களையும் திட்டங்களையும் வகுக்கவேண்டிய சட்டப்பேரவையை,  ஆளும் தரப்பினரின் பொழுது “போக்குக்காகப்  பயன்படுத்திடும்    போக்கே  தொடர்ந்து  கொண்டிருக்கிறது. ஆளுநர் உரை, ஆட்சியாளர்களின் குரல் ஒலியே தவிர, அது இந்த ஆட்சியைப் பற்றிய ஆளுநரின் மதிப்பீடல்ல. வெற்றுப் புகழ்ச்சிகளையும், வீண் பாராட்டுரைகளையும் திணித்துக் கொண்ட காகிதக்கட்டாக ஆளுநர் உரை இருந்த காரணத்தால்தான், அதனைப் புறக்கணித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தோம்.
வெளிநடப்பு என்பது எதிர்ப்பைக் காட்டுவதற்கான ஓர் அடையாளம். அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறை.  ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற ஜனவரி 7ம் நாள் பேரவையில், மத்திய பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுகவின் சார்பில் கொடுத்த  தீர்மானத்தை நிறைவேற்றுமாறு திமுகவும் தோழமைக் கட்சியினரும் வலியுறுத்தினோம்.

அதிமுக அரசு தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனால், இந்தக் கோரிக்கை பேரவையில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதைக்கூட பேரவைத் தலைவர் தெரிவிக்கவில்லை. மாநிலங்களவையில் அதிமுக மற்றும் பாமகவின் 11 வாக்குகள் பாஜக அரசுக்கு ஆதரவாக விழுந்திரா விட்டால், குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறியும் இருக்காது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் போராட்டங்களும்  நடந்திருக்காது என்று ஜெ.அன்பழகன் குறிப்பட்டுச் சொன்னபோது, அந்த உண்மையை ஆளுந்தரப்பினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவைக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்கூறி, கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க ஜெ. அன்பழகனுக்குத் தடைவிதித்து பேரவைத்  தலைவர் உத்தரவிட்டார். ஜனவரி 8ம் நாள், ஆளுநர் உரை மீது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய கருத்துகளை எடுத்து வைத்து உரையாற்றினேன். அரசைப் புகழ்ந்துள்ள இந்த உரை ஆளுநர் உரை அல்ல. அரசின் அச்ச உரை என்பதை, அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினேன். பொய்யான  வாக்குறுதிகளை அதிமுக அரசு வழங்கியதால் தான், அரியலூர் அனிதா தொடங்கி 7 மாணவச்செல்வங்களின் உயிர்களைப் பறிகொடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய ஜனவரி 9ம் நாளன்று, கன்னியாகுமரி மாவட்டம்  களியக்காவிளை சோதனைச் சாவடியில், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்பதில்தான் தமிழ்நாடு முதலிடம் என்பதையும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் பெருமையுடன் தலை நிமிர்ந்து சொல்வாரா? அதனால் தான் ஆளுநர் உரை என்பது மாநிலத்தின் உண்மை நிலைமையை எடுத்துச் சொல்லாமல், மக்களுக்கான ஆக்கப்பூர்வமான  பணிகளை குறிப்பிடாமல், வெற்றுப் புகழுரைகளால் நிறைந்திருக்கிறது என்பதைத் தொடக்க நாள்முதலே எடுத்துரைத்து வெளிநடப்புச் செய்தது திமுக கூட்டத்தொடரின் இறுதி நாளில் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுக தன் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அது ஆளுங்கட்சியாக வேண்டும் என்கிற மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றிட, இன்றைய ஆட்சியாளர்களே ஒத்துழைப்பது  போல அமைந்திருக்கிறது; ஆளுநர் உரையும்,  அதன் மீதான ஆளுந்தரப்பின் உரைகளும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : speech ,Governor ,volunteers ,MK Stalin , Governor's speech ,empty praise, mention people's tasks
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...