×

பொங்கலின்போது நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அனுமதிக்கப்பட்ட இடங்களை மீறி பயணிகளை ஏற்றினால் நடவடிக்கை

* ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கூடுதல் கமிஷனர் அருண் எச்சரிக்கை

சென்னை : பொங்கல் பண்டிகையின்போது அனுமதிக்கப்பட்ட இடங்களை மீறி ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். அந்த வகையில், அரசு விரைவுப்போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ேநற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் தலைமை வகித்தார். கூட்டதிற்கு பிறகு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் கூறியதாவது:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் அதேபோல்  வெளிமாவாட்டங்களில் இருந்து சென்னைக்குள் வரும் பேருந்துகள் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  அதேபோல், அரசு விரைவுப்பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் அவர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் பயணிகளை ஏற்ற வேண்டும். அதை தவிர்த்து நினைத்த இடங்களில் சாலையில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பயணிகளை ஏற்றினால் சம்பந்தப்பட்ட பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  குறிப்பாக ஆம்னி பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து போலீசார் சுழற்சி முறையில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறி யாரேனும் பேருந்துகளை இயக்கினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Passengers ,Pongal ,areas , passengers are overstepping,permitted areas,congestion during Pongal
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...