×

பொதுமக்களின் வசதிக்காக எம்டிசி சார்பில் சென்னையில் மீண்டும் ஏசி பஸ்கள் சேவை : விரைவில் 46 பேருந்துகள் இயக்கம்

சென்னை: சென்னையில் மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் நேற்று முதல் குளிர் சாதனப்பஸ்கள் இயக்கப்படுகிறது. விரைவில் மேலும் 46 பேருந்துகளை இயக்குவதற்கு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சாதாரண மக்களும் பயணிக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட குளிர் சாதனப் பேருந்தினை நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேருந்துகளில் உள்ள சிறப்பு அம்சங்கள் பற்றி விளக்கினார். குறிப்பாக, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசின் அகில இந்திய மோட்டார் வாகன தரக்கட்டுப்பாடு மையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நவீன முறையில், நல்ல தரத்தில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டு, 40 பயணிகள் அமர்ந்தும், 20 பயணிகள் நின்றும் பயணம் செய்யலாம். மேலும், பயணிகள் அடுத்த பேருந்து நிறுத்தத்தினை முன்கூட்டியே அறிந்துகொள்ள ஏதுவாக ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் பயணிகள் பயணம் செய்திட ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்தின் உத்தேச மதிப்பு 36 லட்சம் ரூபாய். பொங்கல் திருநாளை முன்னிட்டு, முக்கியமான வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை, கோயம்பேடு முதல் சிறுசேரி வரையில் (வழித்தட எண்.570) முதல் குளிர்சாதனப் பேருந்து இயக்கப்படுகிறது. குறைந்தபட்ச கட்டணமாக 15ம், அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வரையிலான தூரத்திற்கு ₹60 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தாம்பரம் முதல் திருவான்மியூர் (வழித்தடம் எண்.91) வரையில் இயக்கப்படும் குளிர்சாதனப் பேருந்தில் குறைந்தபட்சமாக 15ம், அதிகபட்சமாக 45ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்ட வால்வோ குளிர்சாதனப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக 28 நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது குறைந்தபட்ச கட்டணமாக 15 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், எஞ்சியுள்ள 46 குளிர்சாதனப் பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு

சென்னையில் கடந்த 2008ம் ஆண்டின் இறுதியில் ஏசி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன. முதலில் பொதுமக்களிடத்தில் குறைவான வரவேற்பு இருந்தது. இதற்கு கட்டணம் அதிகமாக இருந்ததே காரணம். படிப்படியாக அனைத்து தரப்பினரும் பயன்படுத்த துவங்கினர். பல்வேறு காரணங்களால் ஏசி பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. மீண்டும் இத்தகைய பஸ்களை இயக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஏசி பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

Tags : MTC ,AC ,Chennai , AC buses, Chennai ,MTC , convenience of the public
× RELATED வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை...