×

மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்ட பாதுகாப்பு வாபஸ் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு விலக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டு வந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பினை தமிழ்நாடு அரசு விலக்கிக்கொண்டு இருப்பது தவறான நடவடிக்கையாகும். தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா லட்சியங்களுக்கு எதிராக, திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக திட்டமிட்டுப் பரப்பப்படும் கருத்துகளுக்கு ஸ்டாலின் சரியான எதிர்ப்பைக் காட்டி வருகிறார். மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு தொடர்வதுதான் நியாயமானது. அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த காவல் பாதுகாப்பை விலக்கிக்கொண்ட தமிழக அரசுக்கும், அதற்கு ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருநாவுக்கரசர் எம்பி (தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்): திமுக  தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு  வழங்கப்பட்டிருந்த உயர்மட்ட சிறப்பு பாதுகாப்பை மத்திய பாஜ அரசு  பழிவாங்கும் விதத்தில் திரும்பப் பெற்று இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.  ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு தொடர அனுமதிக்க  வேண்டுமென மத்திய பாஜ அரசை கேட்டுக் கொள்கிறேன். முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி வரும் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை விலக்கிக்  கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகளை படுகொலை செய்யும்  அளவிற்கு பயங்கரவாதச் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் தமிழ்நாடு சட்டமன்ற  எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங். தலைவர்):  மத்திய பாஜ அரசு, காங்கிரஸ் - திமுக தலைவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது ஒரு அப்பட்டமான பாரபட்சமிக்க நடவடிக்கை. தமிழக மக்களின் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, இத்தகைய சிறப்பு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று உளவுப் பிரிவு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் தான் இதுவரை இசட் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் எந்த அடிப்படையில் திரும்பப் பெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்குரிய விளக்கத்தை நாட்டு மக்களுக்கு தர வேண்டும்.

Tags : Leaders ,Viggo ,security withdrawal ,vaiko ,MK Stalin , vaiko condemn ,MK Stalin's, high-level security withdrawal
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...