×

சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை கேரளாவில் பதுங்கிய 3 பேர் சிக்கினர்

* தலைமறைவாக உள்ள 2 தீவிரவாதிகளை பிடிக்க இரு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை

நாகர்கோவில்: களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ. சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 2 தீவிரவாதிகளுக்கு உதவியதாக, 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டம் களியக்காவிளை மார்க்கெட் ரோட்டில், குமரி மாவட்ட காவல்துறை சார்பில் சோதனைச்சாவடி உள்ளது. கடந்த 8ம்தேதி இரவு சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சனை (57) மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் ெகான்றனர். இதுதொடர்பாக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, 2 மர்ம நபர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்து தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம், கோட்டார் பகுதியை சேர்ந்த தவுபிக் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளனர். காவல்துறை சார்பில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். சோதனைச்சாவடியில் இருந்த வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டும், அரிவாளால் வெட்டி விட்டும் இவர்கள் தப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகள் கேரளாவுக்கு தப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தமிழக மற்றும் கேரள எல்லை பகுதிகளில் இரு மாநில தனிப்படைகள் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளன. இதையடுத்து, கேரளாவில் பதுங்கி இருந்த 3 பேரை  கேரள தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த செய்யது இப்ராஹிம், அப்பாஸ் ஆகியோரை பாலக்காடு தெற்கு போலீசாரும், பூந்துறையை சேர்ந்த ரபீக் என்பவரை தமிழக தனிப்படை போலீசாரும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தவுபிக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோருக்கு 3 பேரும் பல்வேறு வகையில் உதவி செய்தது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து இரு கை துப்பாக்கிகள், இரு வீச்சரிவாள், 4 கத்தி மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்ைற பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பில் உள்ளனர், யார் யாருடன் தொடர்பு உள்ளது. இவர்களை இயக்குவது யார் என்பது பற்றி கேரள மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் முன்னேற்றம் தென் மண்டல ஐ.ஜி. பேட்டி

களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், குமரியில் முகாமிட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். இதுகுறித்து, ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி., அறிவுறுத்தல்படி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. துரிதமாக விசாரணை நடந்து வருகிறது. வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். 10 தனிப்படைகள் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை முடிவில் அனைத்து தகவல்களும் தரப்படும்’ என்றார்.

துப்பு கொடுத்தால் 4 லட்சம் சன்மானம் தமிழக காவல்துறை அறிவிப்பு

குமரி  மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அப்துல் சமீம், தவுபீக்  ஆகியோர் பற்றி தகவல் தெரிந்தால், தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர்  அலுவலகத்தை 04651 250741, 94981 01914, களியக்காவிளை காவல் நிலையம் 04651 244485, குமரி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04652 220417 ஆகிய  டெலிபோன் எண்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.  இவர்கள் இருவர் பற்றியும்  துப்பு கொடுத்தால் தலா 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்’ என்று அறிவித்து உள்ளது.

Tags : Kerala Sub-inspector ,Kerala , Sub-inspector shot dead, 3 people, Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...