×

மெட்ரோ ரயில் நிலையங்களில் இரண்டு அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க ஆய்வு

சென்னை: இரண்டு அடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பதற்கு ஏதுவாக உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, வாகன இணைப்பு சேவை, ஷேர் ஆட்டோ, கேப் வசதி உள்ளிட்ட சேவைகளை அளித்து வருகிறது. நாள்தோறும் 1 லட்சம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர் உள்ளிட்ட 23 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில வாகன நிறுத்தங்களில் இடவசதி மிகவும் குறைவாக உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு சிரமமாக உள்ளது. எனவே, அந்த நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட இருசக்கர வாகன நிறுத்தங்களை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த 2ம் தேதி இரண்டு அடுக்க வாகன நிறுத்தகம் அமைக்கப்பட்டது. இதன்மூலம், 4 இருசக்கர வாகனம் நிறுத்த வேண்டிய இடத்தில் 8 இருசக்கர வாகனத்தை நிறுத்த முடியும். இடவசதியும் அதிகமாகும். இதற்கென தனியான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இந்த திட்டம் உள்ளது. எனவே, இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இரண்டு அடுக்கு வாகன நிறுத்தம் எந்தந்த நிலையங்களில் அமைக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்தகட்டமாக வடபழனி ரயில் நிலையத்தில் இத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நிலையங்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு அதற்கான பணிகள் தொடங்கும். இவ்வாறு கூறினார்.


Tags : Inspection ,parking lot ,stations ,Metro , At metro stations, parking
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...