×

பாகிஸ்தானில் திடீர் திருப்பம் சீக்கிய வாலிபர் வன்முறையில் கொலை செய்யப்படவில்லை: நிச்சயித்த பெண் கொன்றதாக போலீஸ் தகவல்

பெஷாவர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த அடுத்த நாளே, கைபர் பக்துன்வா மாகாணத்தை சேர்ந்த சீக்கிய இளைஞர் பர்விந்தர் சிங் கடந்த 4 ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். வன்முறையில் அவர்  கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது, இந்திய சீக்கியர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இந்தியாவில் சீக்கியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.இதனால், பாகிஸ்தான் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இறந்த சீக்கிய வாலிபருக்கு வரும் 28ம் தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவரை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த 18 வயதான மணப்பெண் பிரேம் குமாரிதான் கூலிப்படை ஏவி பர்விந்தர் சிங்கை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பர்விந்தரும், பிரேம் குமாரியும் காதலர்கள். இருவரின் விருப்பத்தின் பேரில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, பிரேம் குமாரி தனது தோழியின் முஸ்லிம் சகோதரனுடன் திடீரென காதல் வயப்பட்டுள்ளார். தனது புதிய காதலனை கரம் பிடிக்க மதம் மாறவும் தயாராகி விட்டார். இதற்கு இடையூறாக இருந்த பர்விந்தரை கொலை செய்ய பிரேம் குமாரி திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, ரூ.7 லட்சம் விலைபேசி கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். திட்டமிட்டபடி பர்விந்தரை மர்தான் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருந்த பிரேமின் காதலனும், கூலிப்படையினரும் சேர்ந்து பர்விந்தரை சுட்டுக் கொன்றனர். கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரை பெஷாவர் போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Pakistan ,turnaround ,Sikh , Pakistani, Sikh Youth, Murder, Engaged Woman, Police
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...