×

ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழகம்-மும்பை பலப்பரீட்சை: சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: ரஞ்சி கோப்பை தொடரின் எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில் மும்பை அணியுடன் மோதும் தமிழகம் முதல் வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது. உள்ளூர் போட்டிகளான சையத் முஷ்டாக் அலி டி20, விஜய் ஹசாரே ஒருநாள் தொடர்களில் தமிழ்நாடு அணி பைனல் வரை முன்னேறியது. இந்த 2 இறுதிப் போட்டிகளிலும் கர்நாடகாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், சிறப்பாக விளையாடிய திருப்தி இருந்தது. ஆனால், நடப்பு ரஞ்சி சீசனில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழகம், ஒரு வெற்றியை கூட பெறவில்லை.  வெற்றி பெற வாய்ப்பிருந்த முதல் போட்டியில் கர்நாடகாவிடம் 26 ரன் வித்தியாசத்திலும் , 2வது போட்டியில் இமாச்சல் பிரதேசத்திடம் 71 ரன் வித்தியாசத்திலும்  தோற்றது. தொடர்ந்து 3வது போட்டியில்  மத்திய பிரதேசத்திடம் டிரா செய்து ஒரு புள்ளி பெற்றது. மேலும் 4வது போட்டியில் உத்ரபிரதேசத்திடமும் டிரா செய்தாலும் முதல் இன்னிங்ஸில் பெற்ற  முன்னிலை காரணமாக 3 புள்ளிகள் பெற்றது தமிழ்நாடு.

முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக அவதிப்படுவது  அணிக்கு மேலும் பின்னடைவைக் கொடுத்தது. இந்நிலையில், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்கும் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது. அனுபவ வீரர்கள் ஆர்.அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் (கேப்டன்), அபினவ் முகுந்த் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.  காயம் காரணமாக ஓய்வில் இருந்த பாபா இந்திரஜித், முழு உடல்தகுதியுடன்  மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இதனால் தமிழ்நாடு உற்சாகத்துடன் மும்பை அணியை எதிர்கொள்ளும். இதுவரை நடப்புத் தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாத தமிழ்நாடு அணி உள்ளூர் போட்டியின் மூலம் முதல் வெற்றிக்கு முனைப்பு காட்டும். அதே சமயம் மும்பை அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ரஞ்சி கோப்பை தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணி மும்பை.

நடப்புத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 2டிரா செய்துள்ளது. இன்னும் தோல்வியின் பக்கம் தலைகாட்டவில்லை என்பது தமிழகத்துக்கு தலைவலிதான். மும்பை அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரகானே, சாம்ஸ் முலானி, துசார் தேஷ்பாண்டே என பலரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். முதல் வெற்றிக்கு தமிழகமும், கூடுதல் புள்ளிகளுக்காக மும்பையும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.


Tags : Tamil Nadu ,Mumbai Masters Exam ,Ranji Trophy League ,Ranji Trophy ,multiplex ,Mumbai ,league match , Ranji Cup, Tamil Nadu, Mumbai, Chennai
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...