×

சீனா-பாக். கடற்படை கூட்டு பயிற்சி விமானம் தாங்கி போர்க் கப்பலை அரபிக் கடலில் நிறுத்தியது இந்தியா: முதல்முறையாக காட்டியது ‘கெத்து’

புதுடெல்லி: சீனா-பாகிஸ்தான் போர்க் கப்பல்கள் 9 நாள் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அரபிக்கடல் பகுதிக்கு விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’வை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. அரபிக் கடலின் வடக்கு பகுதியில் பாகிஸ்தான் - சீனா போர்க் கப்பல்கள் 9 நாள் மெகா போர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இது, கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. ‘சீ கார்டியன்ஸ்’ என பெயரிடப்பட்ட இந்த பயிற்சியில், இரு நாட்டு போர்க் கப்பல்களும், நீர் மூழ்கி கப்பல்களும் ஈடுபடுகின்றன. இந்நிலையில், அரபிக்கடல் பகுதிக்கு இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க் கப்பல் ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’வை மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுப்பி நிறுத்தி இருக்கிறது. அண்டை நாடுகளின் போர் பயிற்சியின்போது இந்தியா இதுபோல் செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இந்த கப்பலில் மிக்29 கே ரக போர் விமானங்கள் உள்ளன. கடற்படை துணை தளபதி எம்.எஸ் பவார் உட்பட மூத்த அதிகாரிகள் இந்த கப்பலில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த நடவடிக்கை மூலம், இரு அண்டை நாடுகளுக்கும் இந்தியா தனது ராணுவ நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளது.

சீன-இந்திய கமாண்டர்கள் எல்லையில் பேச்சுவார்த்தை
காஷ்மீரின் வடக்கு பகுதி ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பிர் சிங் 4 நாள் பயணமாக சீனா சென்றார். அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை அருகேயுள்ள சீனாவின் ஜின்ஜியாங் பகுதிக்கு சென்று சீன ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் லியு வான்லாங்கை சந்தித்து எல்லை நிர்வாகம், இருதரப்பு ராணுவ உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 7ம் தேதி, சீன ராணுவ தளபதி ஜெனரல் ஹன் வேகோவை தலைநகர் பீஜிங்கில் ரன்பிர் சிங் சந்தித்து பேசினார் என இந்திய தூதரகம வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.



Tags : India ,Arabian Sea China ,Pak ,Arabian Sea ,Navy , China, Pakistan, warships
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!