×

பிரதமரின் வாரணாசி தொகுதியில் போராட்டக்காரர்களுடன் பிரியங்கா காந்தி சந்திப்பு

வாரணாசி:  பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு தரப்பினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் வெடித்து உயிரிழப்புக்களும் ஏற்பட்டது. போராட்டங்களில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் பிரியங்கா காந்தி நேற்று 4 மணி நேரம் பார்வையிட்டார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள், போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களை அவர் சந்தித்து பேசினார். மேலும், பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர்களையும் பிரியங்கா சந்தித்து கலந்துரையாடினார்.

பாஜ கடும் எதிர்ப்பு:
வாரணாசி தொகுதியில் பிரியங்கா பார்வையிட்டதை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக மாநில பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், “குறிப்பிட்ட சிலரின் வலிகள் மட்டுமே பிரியங்கா காந்திக்கு தெரிகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற அவர், அவரது கொள்கைகளுடன் வேறுபட்ட காயமடைந்த மாணவர்களை விலக்கி வைத்து விட்டு, குறிப்பிட்ட சிலரை மட்டுமே சந்தித்தார். நான் அவருக்கு ஒரு சவால் விடுகிறேன். காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானின் கோடா மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அவரும் ஒரு தாய், அவர் தன்னை போலவே பிற தாய்மார்களின் வலியையும் உணர வேண்டும். கோடா சென்று உயிரிழந்த குழந்தைகளின் தாய்களை அவரால் சந்திக்க முடியுமா?’’ என தெரிவித்தார்.


Tags : Priyanka Gandhi ,protesters ,constituency ,Varanasi ,PM , Varanasi, protesters, Priyanka Gandhi
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!