×

புவி வெப்பம் அதிகரிப்பதால் இந்துகுஷ்-இமயமலையில் மாயமாகும் பனிமலைகள்

ஹாங்காங்: புவி வெப்பம் அதிகரிப்பதால், இந்துகுஷ்-இமயமலைப் பகுதிகளில் பனி மலைகள் உருகி வருகின்றன. ஆசிய நதிகளின் முக்கிய ஆதாரமாக இருக்கும் இந்த பனிமலைகள் மாயமாவதால், 2100ம் ஆண்டு, லட்சக்கணக்கான மக்கள் பெரும் ஆபத்தை சந்திப்பார்கள் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.  பருவநிலை மாற்றத்தால் பூமியில் அதிக வெப்பம் ஏற்படுகிறது. பருவமழை முறை தவறி பெய்து வெள்ளம் ஏற்படுகிறது. நதிகளில் மாசும் அதிகரித்துள்ளது. சுத்தமான தண்ணீர் கிடைப்பது தற்போது அரிதாகி விட்டது. புவி வெப்பம் அதிகரிப்பதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ள, உலக நாடுகள் தயாராகி வருகின்றன. இதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 2015ம் ஆண்டு சர்வதேச ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில், அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் மக்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு சர்வதேச மையத்தின்(ஐசிஐஎம்ஓடி) இயக்குனர் டேவிட் மோல்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்துகுஷ்-இமயமலைப் பற்றி மதிப்பீடு செய்து தாக்கல் செய்யப்பட்டுள்ள  ஆய்வறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: புவி வெப்பத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், இங்குள்ள பனிமலையில் 3-ல் இரண்டு பங்கு 2100ம் ஆண்டு இருக்காது என கூறப்பட்டுள்ளது. இந்த மலைத் தொடர் ஆப்கானிஸ்தானில் இருந்து மியான்மர் வரை உள்ளது. உலகின் மிகப் பெரிய ஆறுகளான பிரம்மபுத்ரா, யாங்சே, மெகாங், மற்றும் இந்துஸ் நதிகள் எல்லாம் இங்கேதான் உருவாகின்றன. இந்த ஆறுகளின் நீரை நம்பித்தான் 165 கோடி மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. இவர்களில் பலர் விவசாயத்தையும், இந்த ஆறுகளின் மூலம் பெறப்படும் நீர் மின்சக்தியையும் சார்ந்து இருக்கின்றனர்.

உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் மக்கள், ஆசிய கண்டத்தில்தான் வசிக்கின்றனர். இவர்களுக்கு தற்போது சுத்தமான தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிட்டது. பருவநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் பனிமலைகள் மாயமாகி தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு மேலும் குறையும். இது ஆசிய நாடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2040-ல் மஜூலி மறையும்:
உலகின் மிகப் பெரிய ஆற்று தீவு, மஜூலி மாவட்டம். அசாம் மாநிலத்தின் வடக்கு கிழக்கு பகுதியில் பிரம்மபுத்ரா நதிக்கரையில் இது அமைந்துள்ளது. இங்கு பல லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, விவசாய நிலப் பகுதிகளை எல்லாம் நீண்ட காலத்துக்கு மூழ்கடிக்கிறது. புவி வெப்பம் அதிகரிப்பால், பனிமலைகள் மேலும் உருகி பிரம்மபுத்ராவில் இன்னும் அதிகளவு வெள்ளப் பெருக்கு ஏற்படும். இதனால், 2040ம் ஆண்டில் மஜூலி மாவட்டம் காணாமல் மறையும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 


Tags : warming ,Hindu Kush-Himalayas , Global warming, Induskush, Himalayas, glaciers
× RELATED மகளிர் உரிமை தொகை தொடக்க விழாவிற்கு...