×

பல இடங்களில் கவுன்சிலர்கள் கடத்தப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் தலைவர் பதவிக்கு நாளை மறைமுக தேர்தல்

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நடைமுறை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது. பல இடங்களில் சுயேட்சை கவுன்சிலர்கள் கடத்தி சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில் நாளையில் தேர்தல் நடைபெற இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டமாக தேர்தல் நடந்தது. 515 மாவட்ட கவுன்சிலர், 5090 ஒன்றிய கவுன்சிலர் உள்பட தமிழகம் முழுவதும் 91,975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது.  தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக  இணையதளத்தில் வெளியிட்டது.

அதன்படி, 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில்  513 இடங்களுக்கான முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில்  திமுக அதிகபட்சமாக 243 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும், அதிமுக 214 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் கைப்பற்றியது. இதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ்  22 இடங்களையும், பாஜ, இந்திய கம்யூனிஸ்ட் தலா 7 இடங்களையும், தேமுதிக 3  இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களையும் கைப்பற்றின.  மற்ற கட்சிகள் 22 இடங்களை பிடித்தன. 5090 ஒன்றிய கவுன்சிலர்  இடங்களில் 5085 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டதில் திமுக 2099 இடங்களை கைப்பற்றியது. அதிமுக  1781 இடங்களை வென்றது. இதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் 131  இடங்களையும், தேமுதிக 91 இடங்களையும், பாஜ 85 இடங்களையும், இந்திய  கம்யூனிஸ்ட் 62 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 33 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மற்றவர்கள் 795 இடங்களை கைப்பற்றியுள்ளனர். ஏற்கனவே 18,570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வெற்றி பெற்ற புதிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கடந்த 6ம் தேதி பதவி ஏற்றனர். இதையடுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி துணை தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நாளை (11ம் தேதி) நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல் கலெக்டர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட ஊரக முகமை வளர்ச்சி அலுவலகத்திலும், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் தேர்தல் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி துணை தலைவர் தேர்தல் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல் காலை 11 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர்களுக்கான தேர்தல் பிற்பகல் 3 மணிக்கும் நடைபெற உள்ளது. போட்டியில்லாத இடங்களில் தலைவர்கள், துணை தலைவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

போட்டி இருக்கும் இடங்களில் மறைமுக வாக்கெடுப்பு நடைபெறும். மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய குழுவில் சம பலம் அல்லது ஒன்றிரண்டு வார்டுகள் குறைந்த இடங்களில் தலைவர் பதவிகளை பிடிக்க சுயேட்சைகளை இழுக்க குதிரை பேரத்தில் ஆளுங்கட்சி ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோல் பணம், பதவி ஆசை காட்டி பல இடங்களில் சுயேட்சை கவுன்சிலர்களை கடத்தி சுற்றுலா தலங்களில் ஆளுங்கட்சி சிறை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி தலைவர் அலுவலகங்களில் நாளை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. இதுபற்றி புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி கூறுகையில், மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், 13 ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் 497 ஊராட்சி துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தலைவர், துணைத் தலைவர் பதவி தேர்தலுக்காக அந்தந்த இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேர்தல் நடத்தப்படும் என்றார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் தாக்கல் செய்த மனுவில், ஊரக உள்ளாட்சி  பதவிகளில் மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர்கள் தேர்தல்  வாக்கு எண்ணிக்கையின் போது, திமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட  போதும், சான்றிதழ்கள் வழங்காமல், ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக  சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டனர். இதேபோல், மாவட்ட பஞ்சாயத்து மற்றும்  பஞ்சாயத்து யூனியன் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலிலும் அதிமுகவினர்  முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.

எனவே, தேர்தல் நடைமுறைகள் அனைத்தையும்  முழுமையாக ஆடியோவுடன் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல்  ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.  தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு  வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் தவிர வேறு எவரையும்  அனுமதிக்க கூடாது. முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் காட்டக்கூடாது  என்றும் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு  வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், மாவட்ட  பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள்  பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைமுறைகள் முழுவதும் ஆடியோ இல்லாமல் வீடியோ  பதிவு மட்டும் செய்யப்படும். அனைத்து விதிகளையும் பின்பற்றி,  நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று உத்தரவாதம்  அளித்தார். அதன்படி நாளை நடைபெற உள்ள தேர்தல் நடைமுறை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

Tags : election ,councilors ,places , Election
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...