×

ஐஐடி நிபுணர்கள் இன்று ஒத்திகை: கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள் நாளை இடிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட எச்2ஓ ஹோலிபெயித், ஆல்பாஷெரின், ஜெயின்கோரல்கோவ், கோல்டன்காயலோரம் என்ற 4 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி இந்த கட்டிடங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டன. இதில் நாளை காலை 11 மணியளவில் எச்2ஓ ஹோலிபெயித், அடுத்த 10 நிமிடங்களுக்கு பின்னர் ஆல்பாஷெரின் கட்டிடத்தின் 2 டவர்கள் இடிக்கப்படுகின்றன. நாளை மறுநாள் காலை 11 மணியளவில் ஜெயின்கோரல்கோவ், 2 மணிக்கு கோல்டன் காயலோரம் கட்டிடமும் இடிக்கப்படுகிறது. முதலாவதாக இடிக்கப்பட உள்ள எச்2ஓ ஹோலிபெயித் கட்டிடத்தில் 19 மாடிகளில் 98 அபார்ட்மென்ட்டுகள் உள்ளன. இதன் மொத்த பரப்பளவு 18370.49 சதுரமீட்டர் ஆகும். இங்கு மொத்தம் 1471 துளைகள் போட்டு அதில் 212.4 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தை இடிப்பதற்கான செலவு ரூ.64 லட்சமாகும்.

இதையொட்டி நாளை காலை 9 மணிக்கு இடிக்கப்பட உள்ள கட்டிடங்களை சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைவரும் அப்புறப்படுத்தப்படுவார்கள். காலை 10.30 மணிக்கு முதல் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கப்படும். ஒரு நிமிடத்துக்கு பின்னர் அப்பகுதியில் வசிப்பவர்கள் சென்றுவிட்டார்கள் என்பது உறுதி செய்யப்படும். 10.55 மணிக்கு 2வது அலாரமும், 10.59க்கு 3வது அலாரமும் ஒலிக்கப்படும். அப்போது 200 மீட்டர் சுற்றளவில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும். சரியாக 11 மணிக்கு இந்த கட்டிடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள குண்டனூர்-தேவரா பாலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்ட் ஷெட்டில் இருந்து கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள வெடி பொருட்களை நிபுணர்கள் வெடிக்க வைப்பார்கள். பயங்கர சத்தத்துடன் வெடிபெருள்கள் வெடிக்கும்போது விநாடிக்கு 3.15 கிலோ மீட்டர் வேகத்தில் கட்டிடம் இடிந்து விழும்.

சில நொடிகளில் அடுக்குமாடி கட்டிடம் தரைமட்டமாகி கட்டிட கழிவு குவியலாக காணப்படும். இதுபோல் ஆல்பாஷெரின் அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்படும். இதில் 2 டவர்கள் உள்ளன. இந்த டவர்களில் தலா 16 மாடிகளில் மொத்தம் 80 அபார்ட்மென்டுகள் உள்ளன. இங்கு 3598 துளைகளில் 343 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் டவரின் பரப்பளவு 6584 சதுரமீட்டரும், 2வது டவரின் பரப்பளவு 12149.29 சதுரமீட்டருமாகும். இதை இடிப்பதற்கான செலவு ரூ.61 லட்சம் ஆகும். அடுத்த ஜெயின்கோரல்கோவில் 17 மாடிகளில் 128 அபார்ட்மென்டுகள் உள்ளன. இங்கு 2660 துளைகளில் 372.8 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதை இடிப்பதற்கான செலவு ரூ.86 லட்சமாகும். கோல்டன் காயலோரம் கட்டிடம் 17 மாடிகளில் 40 அபார்ட்மென்டுகள் உள்ளன. இந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 6032.60 சதுரமீட்டராகும்.

இங்கு 960 துளைகளில் 14.8 கிலோ வெடி பொருள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ.21 லட்சம் ஆகும். எச்2ஓ ஹோலிபெயித் அபார்ட்மென்ட் இடிக்கப்படும்போது 21461 டன் கட்டிட கழிவுகள் சேரும். இது 18 மீட்டர் அதாவது 6 மாடி கட்டிடத்தின் உயரத்தில் கிடக்கும். ஆல்பாஷெரின் இடிக்கும்போது 21400 டன் கட்டிட கழிவுகள். சேரும் இது 15 மீட்டர் உயரத்தில் கிடக்கும். ஜெயின்கோரல்கோவில் இருந்து 26400 டன் கட்டிட கழிவுகளும், கோல்டன்காயலோரத்தில் இருந்து 10 மீட்டர் உயரம் 3 மாடி உயரத்திலும் கட்டிட கழிவுகள் கிடக்கும். இந்த கழிவுகளை அகற்றுவதில் மிக சிரமம் இருக்கும் என கருதப்படுகிறது. அருகில் உள்ள ஏரியில் கழிவுகள் விழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிகப்பெரிய 4 கட்டிடங்கள் இடிக்கப்பட இருப்பதால் நாளையும், நாளை மறுநாளும் பகல் முழுவதும் 200 மீட்டர் சுற்றளவில் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் கட்டிட இடிப்புக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கட்டிட இடிப்பால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை கண்டறிவதற்காக இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து ஐஐடி நிபுணர்கள் வந்து இந்த ஒத்திகையை செய்து பார்த்தனர்.

Tags : IIT experts ,apartments ,Demolition ,Cochin Apartments ,Kochi , Cochin Apartments
× RELATED குடியிருப்பு பகுதியில் நிறுத்தியிருந்த டூவீலர்களை எரித்தவர்களுக்கு வலை