×

சுசீந்திரம் கோயிலில் சப்தா வர்ணம்: ஏராளமான பக்தர்கள் திரண்டனர்

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் திருவிழாவான நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. காலை 7.45 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்மன் அலங்கரிக்கப்பட்ட நிலையில் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை வசந்தகுமார் எம்பி, ஆஸ்டின் எம்எல்ஏ, ஆர்டிஓ மயில், கோயில் இணை ஆணையர் அன்புமணி, முதுநிலை அலுவலக மேலாளர் சிவானந்தம், வள்ளலார் பேரவை பத்மானந்தா, அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், உறுப்பினர்கள் ஜெயசந்திரன், அழகேசன், பாக்கியலட்சுமி, சதாசிவம், அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன்,கோயில் மேலாளர் சண்முகம்பிள்ளை ,திமுக தோவாளை ஒன்றிய கவுன்சிலர் பூதலிங்கம், வட்டார காங்கிரஸ் தலைவர் காலபெருமாள் உள்பட பலர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

விநாயகர் மற்றும் சுவாமி தேரை ஆண் பக்தர்களும், அம்பாள் தேரை பெண் பக்தர்களும் வடம் தொட்டு இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி வந்த தேர் தாணுமாலய சுவாமி கோயில் முன் 11.30 மணிக்கு நிலைக்கு வந்தது. அங்கு சுவாமி விக்ரகங்களுக்கு சிறப்பு தீபாராதனை அளித்தனர். பின்னர் தங்க குடத்தில் பக்தர்கள் காணிக்கை வழங்கினர். பின்னர் வாகனத்தில் வைத்து ஊர்வலமாக சுவாமியும், 2வது அம்மனும், 3வது விநாயகரும் கோயில் உட்பிரகாரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தேர் நிலையில் நிற்கும்போது கோயில் இணை ஆணையர் அன்புமணி வடம் பிடித்து இழுத்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு தந்த பல்லக்கில் எழுந்தருளல், இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் வீதியுலா வருதல், 12 மணிக்கு தனது தாய், தந்தையுடன் விழாவில் பங்கேற்க வந்த வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி,

வேளிமலை குமாரசுவாமி ஆகிய சுவாமிகள் தங்களது தாய், தந்தையரை சுற்றி வலம் வந்து பிரிந்து செல்லும் சப்தாவர்ண காட்சி நடந்தது. இரவு 12 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர், அறம் வளர்த்த நாயகி அம்மன், தாணுமாலய சுவாமி, அம்பாள், விஷ்ணு ஆகியோர் உட்பிரகாரத்தில் இருந்து வெளியே வந்தனர். அங்கு விநாயகர், கோட்டாறு வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசுவாமி, மருங்கூர் சுப்ரமணிய சுவாமி, முன்னுதித்த நங்கை அம்மன் ஒன்றாக ரதவீதியை சுற்றி வந்தனர். பின்னர் அனைவரும் கோயிலின் முன்பகுதியில் வந்து தாணுமாலய சுவாமியும், அம்பாளும் பிள்ளைகளை பிரிந்து செல்ல முடியாமல் 3 முறை முன்னும், பின்னுமாக ஆடி, ஆடி வந்து 3வது முறையாக உட்பிரகாரத்துக்கு வேகமாக சென்று ருத்ர தாண்டவம் ஆடி கோயிலுக்குள் சென்றனர்.

சப்தாவர்ண காட்சியை புதியதாக திருமணமான தம்பதியரும், வயதான முதியவரும் ஏராளமானோர் குவிந்து தரிசித்தனர். 10ம் திருவிழாவான இன்று(10ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு அஷ்டாபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனமும் நடந்தது. இரவு 9 மணிக்கு திரு ஆறாட்டு நடக்கிறது.

Tags : devotees ,Sushendram Temple , Susindram Temple, Saptha Painted
× RELATED பாலத்தில் மோதி கார் நொறுங்கியது 4 பக்தர்கள் பரிதாப பலி