×

குமரியில் சிறப்பு எஸ்ஐயை காவு வாங்கிய சோதனை சாவடியின் அவல நிலை: சாலையோர குடிசையை விட மோசம்

கருங்கல்: குமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் கேரளாவுக்கு எரிசாராயம், கனிமவளம், ரேஷன் பொருள் கடத்தல் போன்றவை அதிக அளவில் நடந்து வந்தது. இதை தடுக்கும் வகையில் அப்போது பத்மநாபபுரம் ஆர்டிஓவாக இருந்த ஜோதிநிர்மலா கடும் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து காவல்துறை சார்பிலும் எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. இது கொள்ளை கும்பலுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. ஆகவே குறுக்கு சாலைகள் வழியாக தங்களது கடத்தல் சம்பத்தை கும்பல் அரங்கேற்ற தொடங்கியது. இதற்கும் செக் வைக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சில வருடங்களுக்கு முன்பு தக்கலை சரக பகுதியான களியக்காவிளை, அருமனை, பளுகல், ஆறுகாணி, கடையாலுமூடு ஆகிய போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 21 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது.

இதே போல் குளச்சல் சரக பகுதிக்கு உள்பட்ட சூழால், நீரோடி, கொல்லங்கோடு, காக்காவிளை உள்பட 12 இடங்கள் என்று மொத்தம் 33 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. குறிப்பாக களியக்காவிளை, படந்தாலுமூடு, ஆரல்வாய்மொழி ஆகிய சோதனை சாவடிகளில் 24 மணிநேரமும் 4 பேர் பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மற்ற சோதனை சாவடியில் 2 பேர் பணியில் இருப்பார்கள். இதுவே நாளடைவில் 2 பேர் இருந்த இடத்தில் ஒருவர் மட்டுமே பணியில் இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது குளச்சல் சரக பகுதியில் உள்ள 9 சோதனை சாவடியில் இருந்த போலீசார் திரும்ப பெறப்பட்டுள்ளனர். ஆக தற்போது 3 சோதனை சாவடிகள் மட்டுமே இயங்கி வருகிறது. ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, படந்தாலுமூடு, அஞ்சுகிராமம் ஆகிய சோதனை சாவடிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

மற்ற சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டது. மின்வசதி இல்லாததால் பொறுத்தப்பட்ட காமிராக்கள் கழற்றப்பட்டுள்ளன.  சோதனை சாவடி பணிக்கு செல்லும் போலீசார் அந்த பகுதி பிரமுகர்கள் உதவியுடன் சோதனை சாவடியில் ஷெட் போட்டும், தங்களது சொந்த செலவிலேயே இருக்கைகள் போட்டும் உள்ளனர். ஆனால் காவல்துறை அவர்களுக்கு இயற்கை உபாதை கழிப்பதற்கு கூட கழிப்பறை வசதி செய்துகொடுக்கவில்லை. இதனால் சோதனை சாவடியில் பணியில் இருக்கும் போலீசார் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். சிறிய சோதனை சாவடி பணியில் இருக்கும் போலீசாருக்கு வாக்கி டாக்கி கூட வழங்க இல்லை. இதே போலத்தான் சிறப்பு எஸ்ஐ வில்சன் சுட்டு கொலை செய்யப்பட்ட களியக்காவிளை மார்கெட்ரோடு சோதனை சாவடியும் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல்  மிக மோசமான நிலையில் இருந்தது அம்பலமாகி உள்ளது.

கடத்தல் வாகனங்கள் வந்தால் வழிமறித்து  நிறுத்துவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கம்பி உடைந்து சின்னா  பின்னமாகி கிடக்கிறது. ஆகவே சந்தேகப்படும் படியாக வாகனங்கள் வந்தால் தடுத்து  நிறுத்த முடியாத நிலை அங்கு இருந்து இருக்கிறது. சுற்றிலும் தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது அந்த சோதனை சாவடி. அதை பார்க்கும்போது சோதனை சாவடிக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பது தனி கதை. சிமெண்ட் செங்கலால் கட்டப்பட்ட சிறிய ெஷட் தான் இந்த சோதனை சாவடி. அதன் மேல் ஆஸ்பிட்டாஸ் ஓடு போடப்பட்டு, மழை தண்ணீர் உள்ளே வராமல் இருக்க பிளாஸ்டிக் கவரை கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆங்காங்கே காணப்படுகின்ற ஓட்டைகள் அட்டைபெட்டியால் அடைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சாலையோரம் உள்ள குடிசையை விட மிக மோசமான நிலையில்தான் அந்த சோதனை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி வழங்க முடிவு
சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலையானதையடுத்து சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு காமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பல நாட்களாக கண்காணிப்பு காமிரா செயல்படவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கண்காணிப்பு காமிராக்கள் முறையாக செயல்பட்டு இருந்தால் தீவிரவாதிகள் குறித்து மேலும் சில தடயங்கள் கிடைத்து இருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தையடுத்து சோதனை சாவடியில் போலீசாரின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. ஒருவர் இருந்த இடத்தில் 2 பேர் இனி பணியில் இருப்பார்களாம். இது தவிர பணியில் இருப்பவர்களுக்கு துப்பாக்கி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிருக்கு பாதுகாப்பில்லை
குமரியின் கடற்கரை கிராமமான நீரோடியிலும் ஒரு சோதனை சாவடி உள்ளது. சுற்றிலும் ஒரு வீடு கூட கிடையாது. மாறாக கல்லறை தோட்டங்கள்தான் உள்ளன. இந்த சோதனை சாவடி வழியாக ரேஷன் பொருட்கள் அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. ஆனால் இங்குள்ள சோதனை சாவடியில் ஒரு போலீஸ்காரர் மட்டுமே பாதுகாப்புபணியில் இருக்கிறார். அவரது கையில் துப்பாக்கி ஆயுதங்கள் எதுவும் கிடையாது. ஆகவே பெயரளவுக்கு நீரோடி சோதனை சாவடி செயல்படுகிறது. இங்கு பணியில் இருக்கும் போலீஸ்காரரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : checkpoint ,Kumari ,SIU , Kumari, Special SI, Checkpoint
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...