×

தோவாளையில் குரங்குகள் தொல்லை

ஆரல்வாய்மொழி: தோவாளை சுற்றுவட்டார பகுதிகளில் மலையில் இருந்து ஏராளமான குரங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக தோவாளை வடக்கூர் முருகன் கோயில், தெக்கூர் கிருஷ்ணன்புதூர், கமல்நகர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் குரங்குகள் காணப்படுகின்றன. இவை வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள மின் வயர்களில் கூட்டமாக ஏறி அமர்வதால் அறுந்து விழுந்து மின்தடை ஏற்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தால் பொதுமக்களை மின்சாரம் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதுபோல திறந்திருக்கும் வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து பொருட்களை தூக்கி செல்வதும், கீழே தள்ளிப்போட்டு உடைப்பதும், கடித்து  சேதப்படுத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. அத்துடன் தென்னை உட்பட விளைபொருட்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று வடக்கூர் முருகன் கோயில் அருகே பள்ளிக்கு செல்ல தயாராக நின்ற குழந்தைகளை கூட்டமாக வந்த குரங்குகள் அச்சுறுத்திய சம்பவமும் நடந்துள்ளது. குரங்குகளின் தொல்லையால் வீடுகளை பூட்டியே வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்ைல என கூறப்படுகிறது. இதுகுறித்து தோவாளை ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன் கூறும்போது, தோவாளையில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. தென்னை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்வது, குழந்தைகளை அச்சுறுத்துவது என பொதுமக்களுக்கு பல தொல்லைகளை இந்த குரங்குகள் கொடுத்து வருகின்றன. சமீபத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்ததால் கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்து சென்றனர். ஆனால் அருகில் உள்ள பகுதியில் விட்டுவிடுவதால், உடனடியாக மீண்டும் ஊருக்குள் வந்து விடுகின்றன.

எனவே குரங்குகளை பிடித்து பொய்கை அணைக்கு மேல்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும். இதுபோல பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க, வனத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags : field ,The Monkeys , Towels, Monkeys, Troubles
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது