×

குஜிலியம்பாறை அருகே 600 ஆண்டு கோயிலில் மன்னர் காலத்து ஓலைச்சுவடி கண்டெடுப்பு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் 600 ஆண்டு பழமையான கோயிலில் மன்னர் காலத்து ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இங்கு திருமண கோலத்தில் அமைந்துள்ள நரசிம்மரை வணங்கினால் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. லண்டகதிரழகு சாமைநாயக்கர் மன்னர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் 1924ம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் போதிய பராமரிப்பின்றி இருந்ததால் கட்டிடங்கள் விரிசல் விட துவங்கி சேதமடைந்தது. இதனால், இக்கோயிலில் பராமரிப்பு பணிகள் செய்து புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பராமரிப்பு நிதி குறித்த கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறையினர் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டு அதில் தொழிலதிபர்கள், வணிகர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.5 கோடி செலவில் கோயில் பராமரிப்பு செய்து புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 2007ம் ஆண்டு கோயிலில் கட்டுமான பணிகள் துவங்கின. நிதி நெருக்கடி காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக கோயில் பணிகள் நடந்து வருகிறது. கோயில் மூலஸ்தனம் உள்ளிட்ட உட்புற வேலைகள் முடிந்த நிலையில் தற்போது ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோயில் ராஜகோபுர கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்த போது, மேல்பகுதியில் கல் தூண்கள் அமைக்கப்பட்ட அறை போன்று உள்ள இடைவெளியில் ஓலைச்சுவடிகள் குவியலாக கிடப்பதை கண்டுள்ளனர். பின்னர் அவற்றை எடுத்து பார்த்த போது மன்னர் காலத்தில் பயன்படுத்திய ஓலைச்சுவடிகள் என்பது தெரியவந்தது. பல நூறு ஆண்டுகள் ஆனதால் ஓலைச்சுவடிகள் முழுவதும் மக்கி, புழுத்து போய் இருந்ததால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட வாசகங்கள் சரிவர தெரியவில்லை.

பின்னர் அவற்றை குவியலாக ஒன்று சேர்த்து, கோயில் பராமரிப்பு பொறுப்பாளர்களிடம் கொடுத்தனர். பழமை வாய்ந்த இக்கோயிலில் இருந்து ஓலைச்சுவடிகள் கண்டு எடுக்கப்பட்டது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரடி பார்வையிட்டு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் ராஜகோபுரம் பராமரிப்பு பணியின் போது ஓலைச்சுவடிகள் கண்டு எடுக்கப்பட்டது குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. மாறாக ஓலைச்சுவடிகள் குறித்து தகவலை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பராமரிப்பு வேலையில் ஈடுபட்ட பணியாளர்கள் தங்களது செல்போனில் ஓலைச்சுவடிகளை படம் பிடித்து வாட்ஸ்அப் செய்தி மூலம் பரவ விட்டனர். அதன்மூலமே இத்தகவல் பொதுமக்களிடையே பரவியது. கடந்த 12 ஆண்டுகளாக இக்கோயிலில் நடந்து வந்த கட்டுமான பணிகளின் போது வேறு ஏதாவது மன்னர் காலங்களில் பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டதா? என்பது குறித்து அறநிலையத்துறையினர் மற்றும் தொல்லியல் துறையினர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : temple ,Kujiliyampara Kujiliyampara , Kujiliyambara, the king, the monk, the invention
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்