×

கடந்த ஆண்டை போலவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவே நடத்தும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவே நடத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவை தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடத்தாமல் கிராமக் கமிட்டி சார்பில் நடத்த வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக இருதரப்பினரையும் அழைத்து மாவட்ட நிர்வாகம் 3 முறை அமைதிக் கூட்டம் நடத்தியது. இந்நிலையில், தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் கிராமத்தினர் இணைந்த கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதனை கிராமத்தினர் ஏற்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டது. மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் உட்பட பலர உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் விழாக்குழு அமைக்கப்படும்.

இந்த குழுவின் தலைவராக இருப்பவர் கடந்த 10 ஆண்டுகளாக தலைவராக உள்ளார். அவர் ஜல்லிக்கட்டை தன் குடும்ப விழா போல் நடத்துகிறார். ஜல்லிக்கட்டு குழுவில் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு வாய்ப்பு அளிப்பதில்லை. எனவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் விழாக்குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் அனைத்தும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நடத்தலாம். இது தொடர்பாக ஜன. 13-ல் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேசமயம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் கமிட்டியின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : committee ,Avaniapuram Jallikattu ,Madurai ,panel , Avaniapuram, Jallikattu, Judicial Committee, High Court Madurai
× RELATED காணொலி கண்காணிப்பு குழுவால் ஒப்புதல்...