×

மானாமதுரை அருகே ரயில்வே கேட்டை கடக்க 40 நிமிடங்கள்: வெள்ளிக்குறிச்சி மக்கள் தவிப்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வேகேட் தினமும் நாற்பது நிமிடங்களுக்கு மேல் மூடப்படுவதால் கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்கு, பள்ளிக்கு செல்வதற்கு நாற்பது நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மானாமதுரை அருகே உள்ளது வெள்ளிக்குறிச்சி கிராமம் இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் மதுரை-ராமேஸ்வரம் ரயில்பாதை உள்ளது. இங்கு ரயில்வரும் நேரங்களில் கேட் அடைக்கப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக மானாமதுரையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில்( எண்: 56724) கிளம்புவதற்கு முன்பே வெள்ளிக்குறிச்சி கேட் அடைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் இருந்து காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் தினமும் சிரமத்திற்குள்ளாவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வெள்ளிக்குறிச்சியை சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், ரயில்பாதையில் உள்ள ரயில்வே கேட்டுகளுக்கு தற்போது இகேடி சிஸ்டம், குவாட்கேபிள் மூலம் ரயிலின் நகர்வு குறித்து நுட்பமான தகவல்கள் பெறும் வகையில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில் மானாமதுரையில் காலை 7.55 மணிக்கு புறப்படும் ரயிலுக்கு இங்கு 7.50 மணிக்கு கேட் அடைக்கப்படுகிறது. இடையில் ராஜகம்பீரம் நிலையத்தை கடந்து முத்தனேந்தலுக்கு பிறகு வெள்ளிக்குறிச்சி வரும்போது நாற்பது நிமிடங்கள் கிராமத்தினர் காத்து கிடக்க வேண்டியுள்ளது. இதனால் கிராமத்தில் இருந்து காலையில் வேலைக்கு செல்லுவோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவசிகிச்சைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் தினமும் சிரமப்படுகின்றனர். இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags : railway line ,Manamadurai , Manamadurai, Railway Gate, Silverkurichi
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்