×

சீரமைப்பு பணி நிறுத்தம்: சேறும் சகதியுமாக மாறிய மஞ்சனக்கொரை சாலை

ஊட்டி: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மஞ்சனக்கொரை பகுதிக்கு ஊட்டி - இத்தலார் சாலை மஞ்சனக்கொரை, அன்பு அண்ணா காலனி போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை கோடை சீசன் போது ஊட்டி - குன்னூர் இடையே மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது. அண்மைக்காலமாக இந்த சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருந்தது.  இதனால் அவதியடைந்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையை சீரமைக்க கோரி நகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர்கள் சாலையை சீரமைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையை சீரமைக்கக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானம் உடனடியாக சாலையை சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர்.

அதைத்தொடர்ந்து ஓரிரு நாட்களில் சாலையில் இருந்த பள்ளங்களையும் நகராட்சி ஊழியர்கள் மூடினர். இதனால், சாலை சீரமைப்பு பணிகள் உடனடியாக துவங்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இப்பணிகள் தொடரவில்லை. சாலை சீரமைப்பு பணிகள்  அப்படியே விடப்பட்டது. மேலும், சாலையோரத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் மற்றும் கழிவு நீர் என சாலையில் ஓடுவதால், சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
இதனால் சாலையில் நடந்து  செல்லும் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, இச்சாலை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என இப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

Tags : road , Renovation work, Manjakorai, Road
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...