×

சுட்டுக்கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்; முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: குமரி மாவட்டம் களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே வில்சன் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை அறிவித்திருந்த நிலையில் தற்போது ரூ.1 கோடி நிவாரணமும் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக - கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் சோதனை சாவடி உள்ளது. இங்கு குமரி மாவட்டம் மார்த்தாண்டம், பருத்திவிளை, மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வில்சன் (58) என்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார்.

சுமார் 9.25 மணியளவில் வில்சன் தனியாக இருந்தபோது திடீரென வந்த மர்ம நபர்கள் 2 பேர் சோதனை சாவடியில் இருந்த வில்சனை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவர் கத்தியாலும் வெட்டியுள்ளார். இதில் வில்சன் மீது குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். சந்தம் கேட்டு பொதுமக்கள் கூடியதால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் வில்சனை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வில்சன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு வில்சனின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து நேற்று மதியம் 2.15 மணியளவில் பருத்திவிளையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. வில்சன் உடலுக்கு டிஜிபி திரிபாதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின், மார்த்தாண்டம் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. வில்சன் கொலை தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Wilson ,Rafeeq ,Chief Minister ,Kerala ,Tamil Nadu Police , Assistant Inspector, Wilson shot dead, one arrested, Rafeeq arrested, Kerala, Tamil Nadu Police, Chief Minister
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற...