×

மழைநீர் வடிகால் ஒப்பந்தம் வழங்கியதில் ரூ.590 கோடி முறைகேடு நடந்ததா?: அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் ஒப்பந்தம் வழங்கியதில் 590 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் 3800 சாலைகள் அமைப்பதற்காக 48 டெண்டர்களும், 290 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் கட்டுவதற்காக 73 டெண்டர்களும் கடந்த 2018ம் ஆண்டு கோரப்பட்டது. இந்த டெண்டர்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜெயராமன் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டாக சேர்ந்து செயல்படுவதாகவும், சில ஒப்பந்ததாரர்கள் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு டெண்டர் வழங்கப்பட்டதாகவும், தொடர்ந்து, டெண்டர் விதிகளை மீறப்பட்டுள்ளதாகவும் கூறி 2018 நவம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்ததாகவும், மேலும் அந்த புகாரின் ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரி தலைமை செயலாளருக்கு லஞ்சஒழிப்புத்துறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்பட்டுள்ளது குறித்தும், தங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்படாதது குறித்தும் சுமார் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளருக்கு புகார் அளித்ததாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் மனுதாரர்களின் புகார் தொடர்பாக 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பகட்ட விசாரணை பதிவு செய்யப்பட்டு டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஆரம்பகட்ட விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பிய புகாரில் அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதால் அவரும் வழக்கில் பதிவாகி இருக்க அறப்போர் இயக்கத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Rainwater Drainage, Contract, Rs 590 Crore Scam, Report, Corporation
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...