×

சேலம் அருகே பறிமுதல் செய்த அம்மன் சிலை குடந்தை கோர்ட்டில் ஒப்படைப்பு

கும்பகோணம்: சேலம் அருகே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பழங்கால அம்மன் சிலை குடந்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த இலுப்பை தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (47). ரியல்எஸ்டேட் அதிபரான இவர், தனது வீட்டில் பஞ்சலோக சுவாமி சிலையை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராஜசேகரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒன்றே முக்கால் அடி உயரம் கொண்ட ஆறரை கிலோ எடை கொண்ட பஞ்சலோக அம்மன் சிலையை ராஜசேகரன் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ராஜசேகரன் வீட்டில் இருந்த அம்மன் சிலையை 2 நாட்களுக்கு முன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜசேகரனை கைது ெசய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த அம்மன் சிலை 13ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிலை என்பதும், அந்த அம்மன் சிலையை வெளிநாட்டில் விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் கோர்ட்டுக்கு சிலை கொண்டு வரப்பட்டு நீதிபதி முன்பு ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலையை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி மாதவ ராமானுஜம் உத்தரவிட்டார். இதையடுத்து அந்த அம்மன் சிலை, நாகேஸ்வரன் கோயிலில் உள்ள பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

Tags : Salem Statman ,Amman , Salem, confiscation, statue of Amman, surrender
× RELATED விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில்...