×

திருச்செந்தூர் - பாபநாசம் இடையே 80 கிலோ மீட்டர் சாலை அகலமாகிறது: நில ஆர்ஜித பணிக்கு நடவடிக்கை தொடங்கியது

நெல்லை: திருச்செந்தூரில் இருந்து பாபநாசம் வரை உள்ள சாலையில் 80 கிலோ மீட்டர் தூரம் பத்தரை மீட்டர் சாலையாக அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக நில ஆர்ஜிதத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. சுமார் 7.5 மீட்டர் அகலம் உள்ள இந்த சாலையின் பல பகுதிகளில் 6 மீட்டர் அளவிற்கே சாலை உள்ளது. ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த சாலை குறுகலாகவும் பல இடங்களில் அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும் சாலையின் பெரும்பாலான பகுதி ேசதமடைந்து நொறுங்கி கிடக்கின்றன. இதனால் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சாலை மார்க்க பயணம் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. மேலும் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் குறுகிய சாலைகளில் செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் பாதயாத்திரை செல்லும் மாதங்களில் திருச்செந்தூருக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.

இதுபோல் பாளையில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையும் அதிக வளைவுகளுடனும், குறுகிய கல்வெட்டு பாலம் மற்றும் மேடுபள்ளம், ஆக்கிரமிப்புகள் நிறைந்தும் உள்ளது. இந்த சாலையும் 7 மீட்டர் அகலத்திலேயே உள்ளன. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி பராமரிப்பதற்காக, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின்கீழ், திருச்செந்தூர்- பாபாநாசம் சாலையை (மாநில நெடுஞ்சாலை எண் 40) பத்தரை மீட்டர் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதில் திருச்செந்தூரில் இருந்து பாளை கேடிசி நகர் அருகே சீனிவாசநகர் வரையிலான 50 கிலோ மீட்டர் தூரமும் தொடர்ந்து முன்னீர்பள்ளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் இருந்து பாபநாசம் வரை உள்ள சாலையில் 30 கிலோ மீட்டர் தூரமும் என மொத்தம் 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அகலப்படுத்தப்படுகிறது. சீனிவாசநகரில் இருந்து தருவை சுப்பிரமணியபுரம் வரையிலான சாலை நெல்லை நகர பகுதிக்குள் வருவதால் இதில் சேர்க்கப்படவில்லை.

இந்த சாலை அமைப்பதற்காக  ஏற்கனவே சர்வே பணிகள் முடிந்துள்ளன. இதனையடுத்து 80 கிலோ மீட்டர் தூரம் அகலப்படுத்துவதற்காக இச்சாலையின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவதுடன் சில இடங்களில் தேவையான அளவு நில ஆர்ஜிதமும் செய்யப்பட உள்ளன. முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கந்தசாமிபுரம், வீரமாணக்கம், ராஜபதி, கீழத்திருச்செந்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள சில நஞ்சை, புஞ்சை நிலங்களை ஆர்ஜிதம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, இதற்காக நெல்லை மாவட்ட நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அறிவிப்பு செய்துள்ளார். சம்பந்தப்பட்டவர்களிடம் ஆட்சேபனை இருந்தால் அதற்கான விபரம் கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி நில எடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக திருச்செந்தூர் - பாளை சீனிவாசநகர் வரையிலான 50 கிலோ மீட்டர் தூரப்பணிகள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சுப்பிரமணியபுரம் - பாபநாசம் சாலையில் பணிகள் நடக்கும்.

Tags : road ,Thiruchendur ,Babanasam ,Thiruchendur - Babanasam , Thiruchendur, Babanasam, land acquisition works
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...