×

குமரி எஸ்.ஐ. உடலில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள்: பிரேத பரிசோதனை அறிக்கையில் மருத்துவர்கள் தகவல்

குமரி: கன்னியாகுமரி களியக்காவிளை பகுதியில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் உடலில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகு சாலையில் இருக்கும் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில், பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் இரண்டு பேரால் கொல்லப்பட்டார். அப்பகுதியில் இருக்கும் மசூதி ஒன்றிலிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் வில்சனை கொலை செய்த இரண்டு பேர் துப்பாக்கி, கத்தி உடன் மசூதியின் பின்பக்க வாசல் வழியாக ஏறி குதித்து, முன்பக்க வாசல் வழியாக வெளியேறி கேரளா நோக்கிய சாலையை நோக்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்தியதில், ஏற்கனவே நிறுத்தியிருந்த இரண்டு கார்களில் இருவரும் தப்பி சென்ற தகவலும் போலீசாருக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து, சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில் அதிலிருந்த இரண்டு பேரும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் ஷமீம், நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபீக் என்பதையும் தமிழக காவல்துறை கண்டுபிடித்தது. இருவரும் கேரளாவுக்கு கார்களில் தப்பி சென்றதால் அவர்களின்  புகைப்படங்களை அந்த மாநில காவல்துறை, தமிழக காவல்துறைக்கு அளித்தது. இதன் அடிப்படையில் இருவரையும் கண்டுபிடித்து கைது செய்யும் வகையில் களியக்காவிளை கேரளா சாலையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை இரு மாநில போலீசாரும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இரண்டு பேரும் என்.ஐ.ஏ. அமைப்பால் ஏற்கனவே தேடப்பட்டு வந்தவர்கள் என்ற புதிய தகவலும் விசாரணையில் கிடைத்துள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வில்சனின் உடலை பிரேத பரிசோதனை செய்த 7 பேர்கள் கொண்ட மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது. அதில் வில்சனின் முதுகு, வலது கைவிரல், இடது கைவிரல், வலது கால் ஆகிய 4 இடங்களில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்சனின் கழுத்து, நெஞ்சு பகுதியில் 2 தோட்டாக்கள் பாய்ந்து வெளியேறி இருப்பதாகவும், தொடையில் இருந்த இன்னொரு தோட்டா அகற்றப்பட்டிருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : doctors , Kumari, SI, Body, Knife, Injuries, Autopsy, Report, Doctors Information
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை