×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய பாதுகாப்பு படை வாபஸ்: சோனியா, ராகுலை தொடர்ந்து மத்திய அரசு திடீர் முடிவு

சென்னை: திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய மத்திய படை பாதுகாப்பை திரும்ப பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் அடங்கிய பல்வேறு பிரிவுகள்  பாதுகாப்பு அளிக்கும். இதன்படி எஸ்பிஜி, இசட் பிளஸ், இசட், ஒய், எக்ஸ் என்று ஐந்து வகையாக பிரித்து பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.   எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு நாட்டின் பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதை தவிர்த்து யாருக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்படாது என்று சமீபத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் செய்தது. மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்கள், மாநில முதல்வர்கள் ஆகியோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இப் பிரிவில் என்எஸ்ஜி பாதுகாப்பு படையை சேர்ந்த 55 வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

 பாஜ தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 25 முக்கிய பிரமுகர்களுக்கு இந்த பிரிவு பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த தமிழக முதல்வர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதன்படி என்எஸ்ஜி பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய 55 வீரர்கள் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர். மேலும், தமிழக துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதன்படி 12 சிஆர்பிஎப் வீரர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
தலைவர்களுக்கான பாதுகாப்பு குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய உள்துறை அமைச்சகம், அமைச்சரவைச் செயலாளர், உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தும். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆலோசனை குழு கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டு வரும் மத்திய படை பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையை எற்றுக் கொண்டு இருவருக்கும் வழங்கப்பட்டு வந்த மத்திய படை பாதுகாப்பை திரும்ப பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  

இதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் மற்றும் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பு இன்று முதல் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான உத்தரவு மாநில அரசு மற்றும் இருவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்பிறகு இதற்கு இணையான மாநில போலீஸ் பாதுகாப்பு இருவருக்கும் வழங்கப்படும் என்று தெரிகிறது. சமீபத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தலைவர்கள்  ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற்று அதற்கு பதிலாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து, திமுக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான  மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய படை பாதுகாப்பை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது  என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

* இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில்  என்எஸ்ஜி, சிஆர்பிஎப் வீரர்கள்  55  பேர் இருப்பார்கள்.
* ஒய் பிரிவில் 12 சிஆர்பிஎப் வீரர்கள் மட்டுமே பாதுகாப்பு அளிப்பார்கள்.

Tags : MK Stalin ,O Pannirselvam ,Central Security Force ,DMK ,O. Pannirselvam ,government ,Rahul ,Sonia , MK Stalin, Deputy Chief Minister ,O Pannirselvam, Sonia, Rahul , decision
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...