மக்கள் கோபத்தால் மோடி அசாம் வரவில்லையா?: யெச்சூரி கேள்வி

புதுடெல்லி:  ‘அசாமில் பொதுமக்கள் கோபமாக இருப்பதால்தான், கடந்த முறை கூட பிரதமர் மோடி மாநிலத்தை பார்வையிட வரவில்லையா?’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். அசாம் மாநிலம், கவுகாத்தியில் இன்று கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு-2020 தொடங்குகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அசாம் பாஜ செய்தி தொடர்பாளர் ரூபாயம் கோஸ்வாமி, மோடியின் கவுகாத்தி வருகை இன்னும் உறுதியாகவில்லை என்று கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடித்த நிலையில்,  பிரதமர் மோடியின் அசாம் வருகை தள்ளி வைக்கப்படுவது இது 2வது முறையாகும். ஏற்கனவே இங்கு நடக்க இருந்த இந்தோ-ஜப்பான் ஆண்டு மாநாடு, போராட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசியமக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின் எண்ணிக்கையும், தீவிரமும் அதிகரித்துள்ளது. எனவேதான், பிரதமர் மோடி 2வது முறையாக தனது அசாம் பயணத்தை ரத்து செய்துள்ளார். கடந்த முறையும் பிரதமர் மோடி தனது கட்சி ஆளும் மாநிலத்தை பார்வையிட கூட வரவில்லை. ஏனென்றால், பொதுமக்களின் கோபம்?’ என கூறியுள்ளார்.

Related Stories:

>