×

அமெரிக்கா உட்பட 16 நாட்டு தூதர்கள் ஜம்முவில் ஆய்வு

ஸ்ரீநகர்:  அமெரிக்கா உட்பட 16 நாடுகளை சேர்ந்த தூதர்கள் அடங்கிய குழு, இரண்டு நாள் பயணமாக ேநற்று ஜம்மு வந்தனர். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், இம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாவும் பிரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதிகளில் பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. செல்போன், தொலைபேசி, இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டன. முன்னாள் முதல்வர்கள், முக்கிய கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால், தலைவர்களின் காவல் மட்டும் தொடர்கிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த தூதர்கள் அடங்கிய குழுவினர் இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு வந்தனர். இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ ஜஸ்டர், வங்கதேசம், வியட்நாம், நார்வே, மாலத்தீவு, தென் கொரியா, மொராக்கோ மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தூதர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக நகர் விமான நிலையத்தில் இவர்கள் வந்து இறங்கினர். அவர்களை யூனியன் பிரதேச உயரதிகாரிகள் வரவேற்றனர். இந்த குழு, புதிய யூனியன் பிரதேசத்தின் குளிர்கால தலைநகரமான ஜம்முவிற்கு சென்றது. கவர்னர் ஜி.சி.முர்மூவை அவர்கள் சந்திக்கின்றனர். மேலும், பொதுமக்களையும் சந்தித்து பேச உள்ளனர்.

தூதர்களை அனுமதிப்பதில் மத்திய அரசு இரட்டை நிலை காஷ்மீரை ஆய்வு செய்ய நேற்று வந்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரை அனுமதித்ததை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் இது தொடர்பாக டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், `‘காஷ்மீரில் தூதர்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. வெளிநாட்டு தூதர்களை அனுமதிக்கும் மத்திய அரசு இந்திய அரசியல்வாதிகளை அனுமதிக்க மறுக்கிறது. எனவே மத்திய அரசு அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் காஷ்மீருக்கு செல்ல தடங்கலற்ற அனுமதியளிக்க வேண்டும். காஷ்மீரில் அர்த்தமுள்ள அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம்’’ என தெரிவித்தார்.

Tags : country diplomats ,Jammu ,US , United States, 16 country ,diplomats ,Jammu
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...