×

சோனியா தலைமையில் 13ல் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு: வன்முறையில் ஈடுபட்டதால் அதிருப்தி

கொல்கத்தா: ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வரும் 13ம் தேதி கூட்டப்படும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது,’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 13ம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில்,  ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த வன்முறை சம்பவம், அதனை தொடர்ந்து நாடு முழுவதும் நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் போன்றவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்கு இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
ஆனால், சோனியா அழைத்துள்ள இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘மேற்கு வங்கத்தில் கடந்த புதனன்று தொழிற்சங்கங்கள் சார்பில் தேசிய அளவிலான போராட்டம் நடத்தப்பட்டது. இதில், வன்முறை மற்றும் அராஜக சம்பவங்கள் நடந்தன. ரயில்வே தண்டவாளங்கள், சாலைகளை போராட்டக்காரர்கள் மறித்தனர். இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.  எனவே, சோனியா காந்தியால் 13ம் தேதி கூட்டப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு ஆதரவு தரமாட்டேன்,’’ என்றார்.

யார் கேட்டாலும் சொல்லாதீர்கள்
வடக்கு 24 பர்கனாஸ் மத்யாம்கிராம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று நடந்த போராட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ‘‘குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது நாம்தான். இந்த முறை  தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் 6 புதிய தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படுகிறது. எனவே, நீங்கள் உங்களின் தனிப்பட்ட விவரங்களை யார் ஒருவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். யாராவது வந்து உங்களிடம் விவரங்களை கேட்டால் கூறாதீர்கள்,’’ என்றார்.


Tags : Mamata ,Sonia ,Mamta ,Opposition , Sonia w, Opposition crowd, Mamta, dissatisfaction ,violence
× RELATED ராம நவமியின்போது பாஜ வன்முறையை தூண்டியது: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு