×

பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி அடுத்த பெரும்பாக்கம் பகுதியில், குடிசை மாற்று வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கூவம் கரையோரம் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு, இந்த குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது, சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய், மருத்துவமனை, பள்ளி, பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை, என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக, இந்த பகுதி மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் இப்பகுதி மக்கள்  கொசு தொல்லையால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இங்குள்ள குடியிருப்புகளில் கழிவறைக்கு கதவு இல்லாததால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடியிருப்புகளில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மின்தூக்கியும் இயங்காததால் வயதானவர்கள், சிறுவர், சிறுமியர் சிரமப்படுகின்றனர். இப்பகுதி தெருக்களில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருட்டு பயம் அதிகரித்துள்ளது. இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லை என்பதோடு, மருந்துகளும் இல்லை. இங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கை இல்லை. இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தர கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  நேற்று செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு நுழைவாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இர.ராஜ்குமார் தலைமை வகித்தார். இதில் மாநில துணை செயலாளர் எழில் கரோலின், மண்டல செயலாளர் விடுதலை செழியன் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Demonstration ,cottage transplant board ,Most ,Cottage Replacement Board Apartment Demonstration , cottage replacement, board ,apartment, amenities
× RELATED கோடையில் சில் பண்ணனுமா? இங்கே போங்க…....