×

சென்னை முழுவதும் உள்ள தெரு வியாபாரிகள் குறித்த தகவலை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள தெரு வியாபாரிகள் குறித்த கண்கெடுப்பு விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நடைபாதைகளை முறையாக பராமரிக்க கோரிய வழக்கில், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.இந்த உத்தரவை சரியாக அமல்படுத்தாததால், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆஜராகி நீதிபதிகளிடம், தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு 40 ஆயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கபட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி, சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் தெரு வியாபாரிகள் தொடர்பான கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது. நகர வியாபார குழு பரிசீலனை செய்ததில் 5வது மண்டலத்தில் மட்டும் 637 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நடைபாதைகளில் இருசக்கர வாகனங்களின் ஆக்கிரமிப்பு உள்ளது. இதைத் தடுக்க ராஜாஜி சாலையிலிருந்து கோவிந்தப்பன் நாயக்கன் தெருவரை நடைபாதையில் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியாத வகையில் தடுப்பு தூண்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ₹28 லட்சத்து 95 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி பிப்ரவரி 28ம் தேதிக்குள் முடிவடைந்துவிடும் என்றார்.இதைக்கேட்ட நீதிபதிகள், அனைத்து மண்டலங்களில் எடுக்கப்பட்ட தெரு வியாபாரிகள் தொடர்பான கணக்கெடுப்பு விபங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : High Court ,corporation ,street vendors ,Chennai , Chennai, street vendors, High Court ,corporation
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...