×

குழந்தைகளின் பள்ளி படிப்பை கருத்தில் கொண்டு அடையாறு, கூவம் கரையோர வீடுகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

* ஏப்ரலுக்கு பிறகு தொடரும் * துணை முதல்வர் தகவல்

சென்னை: குழந்தைகளின் பள்ளி படிப்பை கருத்தில் கொண்டு அடையாறு, கூவம் கரையோரம் குடியிருப்பவர்களை அகற்றும் பணி, வருகிற ஏப்ரல் மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்ட பேரவையில் தெரிவித்துள்ளார்.சட்ட பேரவையில் நேற்று துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சேகர்பாபு (திமுக) பேசியதாவது:சென்னை நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் துறைமுகம் தொகுதியில் உள்ள காந்தி நகரில் 2200 குடும்பத்தினரை அங்கிருந்து காலி செய்து பெரும்பாக்கம் பகுதியில் குடியமர்த்தும் பணி கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அந்த பகுதி மக்கள் வாழும் பகுதியிலேயே புதிதாக வீடு வழங்க வேண்டும், என்று துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். ஆனாலும் இப்போது, அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி நடக்கிறது. அவர்கள் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் வசித்து வருவதால், அவர்களின் வாழ்வாதாரம், தொழில் அதை சுற்றியே உள்ளது. இப்போது, திடீரென 40 கி.மீ. தூரத்துக்கு சென்றால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். புதிய பகுதியில் குடிநீர், மின் இணைப்பு வசதி இல்லை. 4 மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், அவர்கள் குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகி விடும். அதனால், அவர்களை பெரும்பாக்கம் பகுதிக்கு இடமாற்றம் செய்யாமல், அவர்கள் வசிக்கும் இடம் அருகிலேயே குடியமர்த்த வேண்டும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சென்னை நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கூவம் நதிக்கரை பகுதியில் உள்ள 14,257 குடும்பங்களை கண்டறிந்து பெரும்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 10,740 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். அதேபோன்று அடையாறு பகுதியில் 9,539 குடும்பத்தில் 4,398 குடும்பத்தினர் எழில்நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதிக்கு மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.சென்னை தீவுத்திடல் எதிரே உள்ள சத்தியவாணி நகர், காந்தி பகுதியில் 2,092 குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 29ம் தேதி முதல் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இவர்கள் குழந்தைகளின் பள்ளி படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காக, வருகிற ஏப்ரல் மாதம் வரை வீடுகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாக்கத்தில் பள்ளி, கல்லூரி, ரேஷன், அரசு மருத்துவமனை, காவல் நிலையம், பூங்கா, சுடுகாடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தரமான வீடுகள் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்குவதுடன், பிழைப்பு ஊதியமாக 12 மாதம் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை மாற்ற ஏற்பாடு, இலவச பஸ் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : evacuation ,homes ,Coovam ,children ,Adyar , Considering , Adyar, Coovam ,coastal homes
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை