×

நிர்பயா பலாத்கார, கொலை வழக்கில் திருப்பம் மரண தண்டனையை எதிர்த்து தூக்கு கைதி மறுசீராய்வு மனு

புதுடெல்லி:  டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ராம் சிங், திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். மற்றொருவன் 18 வயது நிரம்பாத சிறுவனாக இருந்ததால், 3 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டான். இதையடுத்து மீதமுள்ள முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றமும் இந்த தண்டனையை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி வினய் குமார் சர்மா தவிர மற்ற 3 மரண தண்டனை கைதிகள்  தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவை டெல்லி நீதிமன்றம் கடந்த 7ம் தேதி வழங்கியது. அதில், `4 குற்றவாளிகளும் ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட வேண்டும்’ என கூறப்பட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படுவதை நாட்டு மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், `விண்ணப்பதாரரின் சமூக பொருளாதார சூழ்நிலை, நோய் வாய்ப்பட்டுள்ள பெற்றோர் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், சிறையில் அவரது நன்னடத்தையை கருத்தில் கொண்டும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பலாத்காரம், கொலை சம்பந்தப்பட்ட 17 வழக்குகளில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளதையும் கருத்தில் கொண்டும், தனக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவின் காரணமாக, இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், 22ம் தேதி தண்டனை நிறைவேற்றப்படுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

Tags : Nirbhaya , murder, murder ,prisoner
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4ல்...