×

எம்எல்ஏக்கள் நிதியை செலவு செய்ய கடும் நிபந்தனை : துரைமுருகன் குற்றச்சாட்டு

சென்னை: எம்எல்ஏக்கள் நிதியை செலவு செய்ய கடும் நிபந்தனை விதிப்பதாக எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் பேசியதாவது: தமிழக பொதுப்பணித்துறையில் தினக்கூலி ஊழியர்கள் 1458 பேர் 10, 20 ஆண்டுகளாக  பணிபுரிந்து வரும் நிலையில், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.  எம்எல்ஏக்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி நிதி தருவதற்கு தராமல்  இருந்திருக்கலாம். ரூ.3 கோடியை செலவு செய்ய விடாமல் கடும் நிபந்தனைகளை  விதித்துள்ளனர். நாங்கள் மக்களுக்காகத்தான் செலவு செய்யப்போகிறோம். எனவே,  எங்கள் இஷ்டத்துக்கு செலவு செய்ய விடுங்கள். முதலில் நிபந்தனையை  நீக்குங்கள். எம்எல்ஏ நிதியில் ஜிஎஸ்டி வேறு பிடித்தம் செய்து  கொள்கிறார்கள். எங்கள் மக்களுக்கு சாலை, தெருவிளக்கு, கட்டிடம் கட்டுவதற்கு  இப்படி தடைகள் போட்டால் என்ன செய்வது. முதலில் அந்த தடையை நீக்கி அமைச்சர்  அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

அமைச்சர் வேலுமணி :  எம்எல்ஏக்கள் நிதியை பயன்படுத்துவதற்காக, ஏற்கனவே தொடர்ந்த வரையறைதான்  இப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. இது, உங்கள் ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்தது. இப்போதும் தொடர்கிறது. இருப்பினும், இது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு  கொண்டு சென்று, நிதியை பயன்படுத்த உள்ள நிபந்தனையை மாற்றிக்கொள்வது  தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி:  பொதுப்பணித்துறையில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றிய தினக்கூலி  பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். தகுதியானவர்கள்  விடுபட்டு இருந்தால், அதுகுறித்து ஆய்வு செய்து அவர்களை பணி நிரந்தரம்  செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு  திட்டத்தில் செலவு செய்ய இருக்கிற நிபந்தனைகளை விலக்கிக்கொள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் கேட்டுக்கொண்டதற்கு  ஏற்ப பரிசீலனை செய்யப்படும்.
விளவங்கோடு விஜயதாரணி  (காங்கிரஸ்): முதியோர் பென்சன் வழங்கும் திட்டத்தில் ஆண் பிள்ளைகள்  இருந்தால் நிராகரிக்கிறார்கள். ஆண் பிள்ளைகள் உதவுவதில்லை. ஆண் பிள்ளைகள்  இருந்தால் முதியோர் ெபன்சன் தர வேண்டும்.
திருவாடானை கருணாஸ் : சட்டப்பேரவை  எம்எல்ஏக்களுக்கு சென்னையில் சொந்த வீடு கூட இல்லை. அவர்கள் பலர் வாடகை  வீட்டில் வசித்து வருகின்றனர். எனவே, சென்னையில் அவர்களுக்கு  அபார்ட்மென்டில் இலவசமாக வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் : கிராமத்தில் ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைத்துறை எடுக்கிறது. தற்போது 7 ஆயிரம் கி.மீ சாலையை எடுத்துக் கொண்டுள்ளது. இன்னும் நிறைய சாலைகள் இருக்கிறது. அந்த சாலைகள் எடுத்துக்கொள்ளப்படுமா?
முதல்வர் எடப்பாடி: இந்த ஆண்டும் ஊராட்சி சாலைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் ஒப்பந்தம் விடப்பட்டு, இறுதி செய்யப்பட உள்ளது. குறிப்பிட்ட சாலைகளை எடுத்து மேம்படுத்தப்படுகிறது. சுமார் 8 ஆயிரம் ஊரக சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வருகிற ஆண்டுகளிலும் ஊரக சாலைகள் எடுத்துக் கொள்ளப்படும்.

Tags : Duraimurugan ,allegation MLAs , MLAs severely conditioned, spend funds,Duraimurugan allegation
× RELATED திமுக என்பது கொள்கை கூடாரம் அதை...