×

43வது சென்னை புத்தகக்காட்சி தொடக்கம் புத்தகக் காட்சி நடத்த அரசு 75 லட்சம் வழங்கும் : முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அடுத்த ஆண்டில் இருந்து புத்தகக் காட்சிக்கு அரசு சார்பாக ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்று 43வது சென்னை புத்தகக்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி கூறினார். 43வது புத்தகக் காட்சி சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்றார். நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்கினார். புத்தகக்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: தமிழ்நாட்டில் புத்தகத்திற்கு என்று ஒரு பொருட்காட்சி தனியாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இது பெருமைப்படத்தக்க ஒரு விஷயமாகும். இந்த புத்தக காட்சி சென்னையில் மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு வருவது பாராட்டக்குரியது. இந்த புத்தகக்காட்சி இன்று முதல் வருகிற 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக்காட்சியில் இடம்பெற்ற சில அரங்குகள் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதன்படி,

* கீழடி, அகழ்வாராய்ச்சி பற்றிய தமிழக தொல்லியல் துறையின் சிறப்பு அரங்கம் 3000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.
* திருவள்ளுவர் மணற்சிற்பம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
* 15 லட்சம் தலைப்புகளில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடும் இலக்கியம், கலை, அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, பொது அறிவு, விளையாட்டு, உணவு, உடல்நலம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
* 10,000 மாணவர்கள் பங்குபெறும் சென்னை வாசிக்கிறது’ என்ற ஒரு புதிய நிகழ்வு இந்த ஆண்டு நடைபெறுகிறது.
* மனிதன் மிகச்சிறந்த வாய்ப்புகளை பெற வேண்டுமெனில், அவனது தனிமனித கோட்பாடுகள் கண்ணியமானவையாக உருவாக வேண்டுமெனில், புத்தக வாசிப்பை அனுதின சுவாசிப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
* நாட்டிலுள்ள நூலகங்கள் மற்றும் அடிக்கடி நடைபெறும் புத்தக காட்சிகளுக்கு சென்று புத்தக துறையில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியை அறிந்து கொண்டும், அன்றாடம் வெளியாகும் புத்தகங்களை வாங்கிப் படித்தும் தங்களது திறமையையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தினரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் தனிநபர் மட்டுமல்லாமல், நாட்டின் சிந்தனை திறனும் உயர்வு பெறும். அடுத்த ஆண்டில் இருந்து இந்த புத்தகக்காட்சிக்கு அரசு சார்பாக ரூ.75 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், பாண்டியராஜன், சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.கே.முருகன் நன்றி கூறினார்.

Tags : Government ,launch ,Chennai Book Fair: Book Editor , Government will provide, Rs 75 lakhs f, launch of the 43rd Chennai Book Fair, Book Editor
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்