×

மாநகராட்சி வார்டு மறு சீரமைப்பை ரத்து செய்ய திமுக எம்எல்ஏ வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: மாநகராட்சி வார்டு மறு சீரமைப்பை ரத்து செய்யக்கோரி திமுக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதி திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.பி.பழனிவேல் தியாகராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மதுரை இரண்டாவது பெரிய மாநகராட்சி. இங்கு தற்போது 4 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி வார்டுகள் தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகளவு குளறுபடிகள் உள்ளன. எனவே, தற்போது வெளியிடப்பட்ட வார்டு சீரமைப்பை ரத்து செய்ய வேண்டும். விதிகளை பின்பற்றி முறையாக வார்டு மறுசீரமைப்பு செய்யவும், அதன் பிறகே மாநகராட்சி தேர்தலை நடத்த வேண்டுமெனவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் தரப்பில் மூத்தவக்கீல் என்.ஆர்.இளங்கோ, வக்கீல் திலக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘ஆளுங்கட்சியினருக்கு சாதகமான முறையில், அவர்களின் விருப்பத்திற்கேற்ப வார்டு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. எந்த விதிகளையும் பின்பற்றாமல் மனம் போன போக்கில் செய்துள்ளனர். எனவே, இதை ரத்து செய்து, மீண்டும் புதிதாக வார்டு மறுவரையறை செய்ய வேண்டியது அவசியம்’’ என்றனர். இதையடுத்து நகராட்சி நிர்வாக செயலர், உள்ளாட்சிகளுக்கான வார்டு மறு வரையறை குழு தலைவர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலர், மதுரை மாநகராட்சி கமிஷனர், மதுரை கலெக்டர் ஆகியோர் தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன. 29க்கு தள்ளி வைத்தனர்.

Tags : DMK ,Cancellation ,Reorganization ,Govt ,Corporation Ward ,DMK MLA , DMK MLA case , canceled
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி