×

ஈரான் மீது தன்னிச்சையாக போர் தொடுப்பதை தடுக்க டிரம்ப் அதிகாரத்தை முடக்க வாக்கெடுப்பு : அமெரிக்காவில் எதிர்க்கட்சி எம்பி.க்கள் முயற்சி

வாஷிங்டன்: ஈரான் மீது போர் தொடுப்பதை தடுக்கும் வகையில், அதிபர் டிரம்பின்அதிகாரத்தை குறைப்பதற்காக எதிர்க்கட்சி எம்பி.க்கள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க படையினரின் ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் நாட்டை சேர்ந்த புரட்சிகர பாதுகாப்பு படை தலைவர் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால், அமெரிக்கா- ஈரான் இடையே போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக நேற்று முன்தினம் அதிகாலை ஈராக்கில் உள்ள 2 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்த நிலையில், அமெரிக்க வீரர்கள் யாரும் பலியாகவில்லை என அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தினார். மேலும் ராணுவ நடவடிக்கை எதுவும் எடுக்க விரும்பவில்லை என்றும் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இதற்கிடையே, ஈரான் விவகாரத்தில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் உயர் அதிகாரிகள் நாடாளுமன்ற எம்பி.க்களிடம் விளக்கினர். 1973ம் ஆண்டு போர் அதிகார சட்டத்தின்படி, நிர்வாகம் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே பிரதிநிதிகள் சபைக்கு அரசு தெரிவிக்க வேண்டும். அதன்படி ரகசிய கூட்டம் நடந்தது. ஆனால், இதில் தங்களின் கவலைகள் குறித்து அரசு எதையும் கவனத்தில் கொள்ளவில்லை என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. ஏற்கனவே சுலைமானியை கொல்ல உத்தரவிட்டது குறித்து முன்கூட்டியே பிரதிநிதிகள் சபைக்கு அதிபர் டிரம்ப் தகவல் தராததால், அவர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியும், ஈரானுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவதை தடுக்க தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானத்தின் மீது இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இது குறித்து பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பெலோசி அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஈரானுடனான பதற்றத்தை தணிக்கவும், பிராந்தியத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் அதிபரிடம் உறுதியான யுக்திகள் இல்லை என்பது தெளிவாகிறது. போர் அதிகார சட்ட அரசாணையில், எங்களின் கவலைகளைப் பற்றி அக்கறை கொண்டதாக தெரியவில்லை,’’ என்றார். பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சிக்கு அதிக எம்பி.க்கள் இருப்பதால் இத்தீர்மானம் நிறைவேற வாய்ப்புள்ளது. ஆனால், செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சி பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. செனட் சபையில் நிறைவேறினால் மட்டுமே அதிபர் டிரம்ப்பின் அதிகாரத்தை குறைக்க எதிர்க்கட்சி எம்பிக்களால் முடியும்.

பதற்றம் தணிய இந்தியா விருப்பம்

அமெரிக்கா-ஈரான் விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று பேட்டி அளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், ‘‘வளைகுடா பிராந்தியத்தின் நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு விரைவில் பதற்றம் தணிய வேண்டுமென விரும்புகிறோம்,’’ என்றார். முன்னதாக, அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் தணிய இந்தியா அமைதி முயற்சிகளை முன்னெடுத்தால் அதை வரவேற்பதாக ஈரானுக்கான இந்திய தூதர் நேற்று முன்தினம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் எஸ்பர், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் பேசினார். அதைத் தொடர்ந்து, ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரிடம் தொலைபேசியில் பேசினார். ஈரான் விவகாரம் தொடர்பாக இந்த திடீர் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இன்னொரு போரை உலகம் தாங்காது

அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரஸ் விடுத்துள்ள அறிக்கையில், ‘விரோதம் வளர்ப்பதை நிறுத்துங்கள்; அதிகபட்ச கட்டுப்பாடு; மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குதல்; சர்வதேச ஒத்துழைப்புக்கு புத்துயிரூட்டுதல் ஆகிய 4 அம்சங்களை இந்த சமயத்தில் உலக தலைவர்கள் கடைபிடிப்பது அவசியம். வளைகுடா பகுதியில் போரை தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சியையும் மேற்கொள்ள வேண்டியது நமது பொதுவான கடமையாகும். இன்னொரு போரை உலகம் தாங்காது. போரால் மனித இனம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. போரால் எப்போதும், அதிக விலை கொடுப்பவர்கள் சாமானிய மக்கள்தான்,’ என வலியுறுத்தி உள்ளார்.

ஈரான் அணுகுண்டு சோதனை?


ஈரான் வளைகுடா கடற்கரை பகுதிக்கு அருகே அமைந்துள்ள பஷீர் அணு மின் நிலையத்தை ஒட்டி, நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. கடந்த 2 வாரத்தில் அங்கு நடந்த 2வது நிலநடுக்கம் இது. அமெரிக்காவுக்கு எதிராக போர் மூளும் சூழல் உருவாகி உள்ள நிலையில், அடுத்தடுத்து இப்பகுதியில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியிருக்கலாம் என்றும், அதன் காரணமாக அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags : Disabling Trump ,America Iran ,MPs ,Opposition ,war , Referendum to disable Trump's,arbitrary war on Iran
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...