×

பாரதிதாசன் பல்கலை.யில் பேராசிரியர்களை நியமிக்கும் முறையில் மாற்றம் வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள 28 துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை  நிரப்புவதற்காக 14 பேராசிரியர்கள், 14 இணைப் பேராசிரியர்கள், 26 உதவிப் பேராசிரியர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு துறையும் ஓர் அலகாக கருதப்பட வேண்டும். ஆனால், இப்போது துறைகளுக்கு பதிலாக ஒட்டுமொத்த  பல்கலைக்கழகமும் ஒரே அலகாக கருதப்பட்டு, 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.  இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த துறை அலகை மாற்றிவிட்டு பல்கலைக்கழக அலகை அறிமுகப்படுத்தும்போது, 200 சதவீத ரோஸ்டர் சுழற்சி முழுமையாக முடிவடைந்திருக்காத பட்சத்தில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.இவை ஒருபுறமிருக்க ‘துறை அலகு’ முறையிலிருந்து ‘பல்கலைக்கழக அலகு’ முறைக்கு மாறுவதற்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளித்தவர் யார் என்பது உடனடியாக விடை காணப்பட வேண்டிய வினா.

எனவே, அரசாங்கத்தை மதிக்காமல், அரசு கொள்கையை காலில் போட்டு மிதித்து விட்டு, சமூக அநீதி திணிக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிய விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ‘பல்கலைக்கழக அலகு’ இடஒதுக்கீட்டு முறை தடுக்கப்படாவிட்டால் மற்ற பல்கலைக்கழகங்களும் அதையே கடைபிடிக்கத் தொடங்கிவிடும். அது சமூகநீதியை குழிதோண்டி புதைத்துவிடும். எனவே, பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, ‘துறை அலகு’ இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் புதிய நியமன அறிவிக்கையை வெளியிடும்படி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : professors ,Bharathidasan University ,Ramadas ,Appointment of Professors , Appointment of professors ,Bharathidasan University, Ramadas emphasizes
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...