×

சிறுபான்மையினர் எள்ளளவும் அச்சப்பட தேவையில்லை என்ஆர்சி மூலம் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை: என்ஆர்சி மூலம் தமிழகத்தில் சிறுபான்மையினர் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.  தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலுரையாற்றினார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தமிழகத்தில் பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் போன்ற 34,871 நீர்நிலைகளை 2017 முதல் இன்று வரை 2,182 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் பராமரிப்பில் உள்ள 1,315 நீர்நிலைகள் 811.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளன.  இதைத் தவிர ஆறுகள், ஓடைகள், கால்வாய்கள் போன்றவற்றில் 1,141 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 59 பெரிய தடுப்பணைகள் பொதுப்பணித் துறையின் மூலமும், 40 ஆயிரம் சிறிய தடுப்பணைகள் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமும் கட்டப்பட்டுள்ளன.  
* தமிழகத்தில் இந்த ஆண்டு 97 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.   
* சென்னை கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீரோடைகளில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுத்திட 2,371 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.   
* நெல் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, தேவைப்படும் இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
* தலைவாசல் கால்நடைப் பூங்கா வளாகத்தில் தமிழ்நாட்டின் 5வது கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 200 கோடி ரூபாய் செலவில் திருெவாற்றியூர் குப்பம், 120 கோடி ரூபாய் செலவில் தரங்கம்பாடி மற்றும் 100 கோடி ரூபாய் செலவில் கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க மத்திய அரசின் மீன்வளம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புரிந்துணர்வுஒப்பந்தம் செய்துள்ளது.
* இங்கிலாந்திலுள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையினை தமிழ்நாட்டில் தொடங்கிட  அந்நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.  அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் கிங்ஸ் கிளை மருத்துவமனை அமைக்கப்படும்.  
* தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டுகளில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் என இருந்தது.  கடந்த 3 ஆண்டுகளில் அது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.  
* வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவைப்படும் நிதி ஒதுக்கீடு செய்து சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்.
* வருங்காலத்தில் இரு மாநில முதல்வர்கள் சந்திப்புகள் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் தண்ணீர் பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும்.
* மத்திய அரசு தயாரித்த கோதாவரி-காவேரி இணைப்பு திட்டத்திற்கான வரைவு திட்ட அறிக்கையின் மீது அவர்களின் ஒப்புதலை விரைவில் பெற பிரதமரை நேரில் சந்தித்தும்  வலியுறுத்தியுள்ளேன்.
* தமிழ்நாட்டிலுள்ள 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில், அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
* அதிமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்னர் 7 ஆக இருந்த சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை  தற்போது 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  மேலும் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையினை ஏற்று 227 புதிய நீதிமன்றங்கள் திறப்பதற்கான அரசாணையை வெளியிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.  இது தவிர, 16 போக்சோ நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டு, தற்போது 3 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.  மீதமுள்ள 13 போக்சோ நீதிமன்றங்களும் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
* கீழடியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை, மக்கள் பார்வையிடும் பொருட்டு, மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தொல் பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், அதனை நிரந்தரமாக காட்சிப்படுத்த, சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் உலகத் தரம் வாய்ந்த ஒரு புதிய அருங்காட்சியம் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது.
* இந்த ஆண்டு ஒரு வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 900 பேர் மருத்துவர்களாக படிக்கக்கூடிய வாய்ப்பை இந்த அரசு உருவாக்கித் தந்துள்ளது.  
* காவல் துறை இந்திய அளவில் முதன்மை இடத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்காகவும், மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பிக்க, ‘நான்காவது போலீஸ் கமிஷன்’ அமைக்கப்பட்டுள்ளது.
*  மாமல்லபுரத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஏற்கனவே உள்ள வசதிகளை நவீனப்படுத்தவும் தனியே கருத்துரு ஒன்று தயாரித்து மத்திய அரசின் நிதி உதவியுடன் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
*  இந்த ஆட்சியை நடத்தி வரும் நாங்கள் மிகவும் சாதாரணமானவர்கள் தான். ஒரு முதல்வரின்  வாரிசாகவோ, அரசியல் பின்புலம் உள்ள குடும்ப வாரிசாகவோ நான் இந்த இருக்கையில் அமரவில்லை. எதிர்க்கட்சி துணைத் தலைவரும் அப்படித் தான். விவசாய குடும்பத்தில் பிறந்த நான், தொண்டர்களை ஒருங்கிணைத்து பல்வேறு வகையிலும் மக்கள் நலனைப் பற்றியே சிந்தித்து ஆட்சி நடத்தி வருகிறேன்.
* 2018-19ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.17 சதவீதமாக உள்ளது.  இது 2018-19ம் ஆண்டின் தேசிய வளர்ச்சி விகிதமான 6.81 சதவீதத்தைவிட  அதிகமாக உள்ளது. 2019 ஆண்டுக்கான மத்திய அரசின் நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது.
* 27 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வரவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும், 2021லே நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் மக்களின் பேராதரவை தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பெற்று 3வது அதிமுக வெற்றி பெறுவோம்.
* கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்ஆர்சி-ஐ பற்றி, நீண்ட விவாதம் செய்தனர்.  அதற்கு வருவாய்த் துறை அமைச்சர், தமிழ்நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினர் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை தெளிவாகவும், விளக்கமாகவும் அறுதியிட்டும், உறுதியிட்டும் தெளிவுப்படுத்தி இருக்கின்றார்கள். அதிமுக அரசு சிறுபான்மையின மக்களை தொடர்ந்து பாதுகாக்கும் அரணாக விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, அரசியல் உள்நோக்கத்துடன், உண்மைக்குப் புறம்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். சிறுபான்மையின மக்கள் எள்ளளவும் ஐயப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை என்பதையும் திடமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.


Tags : Minorities ,NRC ,CM Edappadi Palanisamy ,Tamil Nadu , Minorities, NRC, Tamil Nadu, Chief Minister Edappadi Palanisamy
× RELATED ‘நாட்டுக்காக ரத்தம் சிந்த தயார்’...