×

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர மறுப்பு மத்திய அரசை எதிர்க்க அதிமுக ஆட்சிக்கு ‘தில்’ இல்லை: துரைமுருகன் பேட்டி,..சபாநாயகரை கண்டித்து திமுக வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசினார். அப்போது, அவர், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என எங்கள் கட்சி தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் கொடுத்திருந்தார். நீங்களும் நாங்கள் கொடுத்த அந்த தனி தீர்மானம் ஆய்வில் உள்ளதாக தெரிவித்தீர்கள். அதை எப்போதாவது எடுத்துக்கொள்வீர்கள்? இன்று (நேற்று) கூட்டத்தின் கடைசி நாள்’’ என்றார். சபாநாயகர் தனபால்: இன்னும் ஆய்வில்தான் உள்ளது. துரைமுருகன்: சட்டப்பேரவை முடிவதற்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் ஆய்வில் உள்ளதாக கூறுகிறீர்கள். எப்போது எடுத்துக்கொள்வீர்கள்? சபாநாயகர் தனபால்: ஆய்வில் உள்ளது. எடுத்துக்கொள்ளப்படும். துரைமுருகன்: எங்களுடைய தீர்மானத்தை எடுத்துக்கொள்ளாத காரணத்தால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். (இதை தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் துரைமுருகன் தலைமையில் வெளிநடப்பு) செய்தனர்.

வெளிநடப்புக்கு பின்னர் எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் அளித்த பேட்டி: இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கேரளாவில் அந்த அரசு தீர்மானம் கொண்டு வந்தது போல் இந்த சபையில் கொண்டுவர வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு தீர்மானத்தை கொடுத்தார். அந்த தீர்மானம் என்ன ஆயிற்று என்று நேற்று முன்தினம் கூட கேட்டார். சபாநாயகர், அது ஆய்வில் உள்ளது என்று சொன்னார். இந்த ஆய்வு நடந்து இன்றைக்கு எடுத்துக்கொள்வார் என்று நேரமில்லா நேரத்தில் எழுந்து கேட்டேன். ஆனால், அவர் இப்போதும் ஆய்வில் இருக்கிறது என்கிறார். இப்படியே போனால் சபாநாயகர் ஆயுளுக்கும் அது ஆய்வில் இருக்கும் போல தெரிகிறது. அதற்கு சபாநாயகர் காரணம் அல்ல. இந்த அரசு மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதற்கு அஞ்சுகிறது.

மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் போடுவதற்கு இந்த ஆட்சிக்கு “தில்” இருக்க வேண்டும். அந்த “தில்” இந்த அதிமுக ஆட்சிக்கு இல்லை. இங்குள்ள முதல்வருக்கும் இல்லை.  பேரவையின் கடைசி நாளிலும்  ஆய்வில் இருக்கிறது என்று கூறுகின்றனர். அப்படியானால், நாங்கள் கொடுத்த தீர்மானத்திற்கு ஆயுள் முடிந்துவிட்டது என்று மறைமுகமாக சபாநாயகர் அறிவிக்கிறார். மற்ற தலைவர்களுக்கு உள்ள தைரியம் இவர்களுக்கு வராது. ஏனென்றால் எஜமானை எதிர்த்து தீர்மானம் கொண்டுவருவார்களா? இது ஆண்டான் அடிமை என்கிற முறையில் இந்த ஆட்சி நடக்கிறது. எனவே, இவர்கள் இல்லாவிட்டாலும் திமுக அதை வன்மையோடு கண்டிக்கும். அதை நாடெங்கும் தெரிவிக்கும்.


Tags : regime ,AIADMK ,Government ,Central ,Denounces Speaker ,DMK ,CAA , CAA, Central Government, AIADMK rule, Duraimurugan, Speaker, DMK walk
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...