×

சோதனைச்சாவடியில் எஸ்.ஐ., சுட்டுக்கொலை ராமதாஸ், வைகோ உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: சோதனைச்சாவடியில் எஸ்.ஐ., சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மர்ம மனிதர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கொடுமையை செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும்.  தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டதாக பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருகிறேன். அதற்கான ஆதாரம்தான் களியக்காவிளை துப்பாக்கிச்சூடு. இனியும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): கன்னியாகுமரி  மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில், காவல் துணை ஆய்வாளர் வில்சன்  மணல் கடத்தல்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது மிகுந்த அதிர்ச்சியும்,  வேதனையும் அளிக்கிறது. தற்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் கவலை  தருகிறது. காவல் துணை ஆய்வாளர் வில்சனை கொன்றவர்களை உடனே கண்டுபிடித்து,  குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும். வில்சனின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜவாஹிருல்லா (மமக: கன்னியாகுமரி-கேரள எல்லையில் சோதனைச் சாவடியில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் காரில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இது மிருகத்தனமான செயலாகும். வில்சனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாபாதக வன்செயலில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்கக் கோருகிறேன்.

Tags : Party leaders ,Vaiko ,Ramadas ,Checkpoint ,SI , Checkpoint, SI, Ramadas, Vaiko, leaders condemned
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...