×

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக தென்னிந்திய பகுதியில் நிலவிய வட கிழக்கு பருவமழை காலம் நேற்றுடன் முடிவடைந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வட கிழக்கு பருவமழை பெருமளவில் மழை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் அனேக  இடங்களில் நீர்பிடிப்பு பகுதிகள் தூர் எடுத்து தயார் நிலையில் வைக்கப்பட்டன. அதற்கேற்ப மழையும் தொடர்ச்சியாக பெய்தது. இந்த ஆண்டுக்கான பருவமழையில் புயல்களே உருவாகவில்லை. ஆனால் காற்றழுத்தங்கள் காரணமாக போதிய அளவுக்கு மழை பெய்துள்ளது. இதற்கிடையே நிலவிய வெயில் மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை நீடித்தது. இந்த ஆண்டுக்கான பருவமழையில் இயல்பைவிட 2 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. மதுரை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

நீலகிரியில் அதிகபட்சமாக 64 சதவீதமும், கோவையில் 21 சதவீதமும் அதிகமாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்து நேற்று வரை பெய்த மழை அளவில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், வேலூர் ஆகிய இடங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. இந்நிலையில், மழை தற்போது குறைந்து அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். காலையில் பனிப் பொழிவு அதிகமாக இருக்கும். வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.


Tags : Northeast Monsoon, Tamil Nadu
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...