×

சுசீந்திரம் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

சுசீந்திரம்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் மார்கழி திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் திருவிழாவான இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. காலை 7.45 மணிக்கு விநாயகர் தேரில் விநாயகரும், சுவாமி தேரில் சுவாமியும், அம்பாளும், அம்பாள் தேரில் அம்பாளும் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. விநாயகர் மற்றும் சுவாமி தேரை ஆண் பக்தர்களும், அம்பாள் தேரை பெண் பக்தர்களும் வடம் தொட்டு இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி வந்த தேர் பிற்பகலில் நிலையை அடைந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகபடிக்கு தந்த பல்லக்கில் எழுந்தருளல், இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் வீதியுலா வருதல், 12 மணிக்கு தனது தாய் தந்தையுடன் விழாவில் பங்கேற்க வந்த வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகிய சுவாமிகள் தங்களது தாய் தந்தையரை சுற்றி வலம் வந்து பிரிந்து செல்லும் சப்தாவர்ண காட்சி நடக்கிறது.

சப்தாவர்ண காட்சியை புதியதாக திருமணமான தம்பதியரும், வயதான முதியவரும் தரிசிப்பார்கள். இதனால் ஏராளமானோர் அங்கு குவிகின்றனர். தேரோட்டத்தில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த பக்தர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். தேரோட்டத்தையொட்டி போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் ஆஸ்ரமம் வழியாக திருப்பி விடப்பட்டிருந்தது. கன்னியாகுமரியில் இருந்து வரும் வாகனங்கள் கற்காடு வழியாகவும் திருப்பி விடப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை என்பதால் தேரோட்டத்துக்கு வரும் அதிகப்படியான பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் மட்டும் நேரடியாக சுசீந்திரம் வரை சென்று திரும்பின.

Tags : Devotees ,Susindram Temple Chariot ,Suchindram Temple Chariot , Suchindram Temple, Theriottam, Devotees
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...