×

ஊட்டியில் கடுமையான உறைபனி: வெப்பநிலை ‘0’ டிகிரி செல்சியசாக பதிவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் துவக்கம் முதல் நீர் பனியின் தாக்கம் அதிகரித்தது காணப்பட்டது. பனியால் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக துவங்கின. தேயிலை, மலை காய்கறிகள் மற்றும் மலர் செடிகளை பனியில் இருந்து பாதுகாக்க காலை மற்றும் மாலை நேரங்களில் ஸ்பிரிங்லர் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள அலங்கார செடிகள் மீது கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் சேதமடையாத வகையில் புல் மைதானத்திற்கு காலையில் பாப் அப் முறையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்கள் மற்றும் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உறைப்பனி விழுந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், ஷூட்டிங்மட்டம், கோத்தி போன்ற பகுதிகளில் உறைப்பனி கொட்டி கிடந்தது. இதனால், புல் மைதானங்கள் அனைத்தும் வெள்ளை கம்பளம் விரித்தார் போல் காட்சியளித்தது. சுற்றுலா பயணிகள் குளிரையும் பொருட்படுத்தாமல், அதனை கண்டு ரசித்தனர். உறைபனி விழுந்த நிலையில், இன்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்ச வெப்பநிலை ‘2’ டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. இந்த ஆண்டு 2 டிகிரிக்கு வெப்பநிலை சென்றது இதுவே முதல் முறையாகும். பனிப்பொழிவால், மலர் தொட்டிகளில்  பனி ‘கட்டி’களாக காட்சியளித்தது. தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் ‘0’ டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது.



Tags : Ooty , Feed, freeze, temperature
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்