×

ஆட்சி நடத்த முடியவில்லையெனில் பதவி விலகுங்கள்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. முற்றுகை போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி முசலமைச்சர் நாராயணசாமி பதவி விலக கோரி ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் பேரணியாக சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி இடையே கடந்த சில நாட்களாக அதிகார மோதல் நீடித்து வருகிறது. இதனால் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இருப்பு இல்லை என்றும், ஆம்புலன்சுக்கு டீசல் கூட போடமுடியாத நிலை இருப்பதாகவும், அதன் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது என தெரிவித்து ஆளும் கட்சியை சேர்ந்த பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதனை தொடர்ந்து, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என தொகுதி மக்கள் அரசாங்கத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை மீது முதலமைச்சர் நாராயணசாமி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் உயிருடன் புதுச்சேரி அரசு விளையாடுகிறது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு குற்றம்சாட்டினார். இதையடுத்து, தொகுதி மக்கள் மருத்துவமனைக்கு உள்ளே செல்லக்கூடாது என்பதற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு வளையம் வைத்து தடுத்தனர். இதனால் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொகுதி மக்கள் அனைவரும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  மேலும் முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலகவில்லை எனில் தம்மை போன்று பல எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரே முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது, புதுச்சேரி மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Narayanasamy ,Congress ,Puducherry , Rule, hold, did not resign, Narayanaswamy, the opposition Congress MLA, fight
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...