×

ஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது

ஹைதராபாத்:  ஆந்திராவில் அமராவதி தலைநகர் உருவாக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை போலீசார் கைது செய்தனர். முன்பு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உருவாக்கிய ஜி.என். ராவ் குழு ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் பிரிக்கப்பட ஆலோசனை செய்யப்படும் என்று கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார்.  

ஆனால், அமராவதியை தலைநகராக்கும் திட்டத்திற்காக நிலங்கள் வழங்கிய விவசாயிகளும், பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் சுற்று பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்காக விஜயவாடாவில் கூட்டு நடவடிக்கை குழுவினருடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது விவசாயிகளின் பிரச்சார யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையறிந்த சந்திரபாபு நாயுடு பறிமுதல் செய்யப்பட்ட பேருந்துகளை உடனடியாக விடுவிக்கக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டார். சந்திரபாபு நாயுடுவிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் பேச்சி வார்த்தை நடத்தினர். எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் சந்திரபாபு நாயுடுவுடன் அவரது மகன் லோகேஷ், தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் கே. அச்சன் நாயுடு உள்ளிட்டவர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். சந்திரபாபு நாயுடுவை கைது செய்து அழைத்து சென்ற பேருந்தை, அவரது கட்சியினர் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடு விடுதலை செய்யப்பட்டார்.


Tags : Chandrababu Naidu ,capitals ,Andhra Pradesh , Chandrababu Naidu, former Chief Minister of Andhra Pradesh, opposition, arrested
× RELATED ஆந்திராவில் வன்னியர் சங்கத்தினர்...